அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அற்பமான எண்ணம் கொண்டவர் என்று ஈரான் விமர்சித்துள்ளது.
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ட்ரம்ப் அறிவித்த முடிவு குறித்து ஈரான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் அலில் லார்ரிஜன் கூறும்போது,"அமெரிக்கா சர்வதேச அளவில் முற்போக்கான மற்றும் சவாலான முடிவுகளை எடுக்கும் நெருக்கடிக்குள் முதிர்ச்சியடையாத தன்மையுடன் நுழைந்துள்ளது. தற்போது அமெரிக்க அதிபராக உள்ள ட்ரம்ப் தனது செயல்களால் ஏற்படும் நீண்ட கால விளைவுகளை அடையாளம் காணவில்லை. அவர் அற்பமான எண்ணத்தை கொண்டிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.
அணு ஆயுத ஓப்பந்தத்தில் ஈரான் - அமெரிக்கா இடையே நிலவிய மோதல், இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை ட்ரம்ப் அறிவித்ததிலிருந்து மேலும் வலுத்து வந்தது. ஹசன் ரவ்ஹானி அமெரிக்க அதிபர் ட்ரம்பையும், அமெரிக்காவையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்த நிலையில் ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
கடந்த 2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அமெரிக்கா அதிபராக பதவி ஏற்றது முதல் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று ட்ரம்ப் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.