இந்தியா மீது மறைமுகப் போரில் பாகிஸ்தான் ஈடுபடுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். பிரதமரின் இக்கருத்தை அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.
இரு நாடுகளும் ஒருவரையொருவர் குறைகூறிக் கொண்டிருக்காமல், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லம் கூறியதாவது:
இந்தியாவுடன் நல்லுறவை பேண வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், இந்திய பிரதமரின் இத்தகைய குற்றச்சாட்டு துரதிர்ஷ்டவசமானது, இருதரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில்தான் இந்திய பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் டெல்லிக்கு சென்றார்.
தீவிரவாதத்தை தூண்டிவிட்டு பாகிஸ்தான் மறைமுகப் போரில் ஈடுபடுவதாக மோடி தெரிவித்துள்ள குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்றது. தீவிரவாதத்தை தொடர்ந்து நாங்கள் எதிர்த்து வந்துள்ளோம். தீவிரவாதத் தாக்குதலில் இதுவரை 55 ஆயிரம் குடிமக்களை இழந்துவிட்டோம். இவ்வாறு தஸ்னிம் அஸ்லம் கூறினார்.