சிரியாவில் தீவிரமடைந்துள்ள உள்நாட்டுப் போரால் அந்த நாட்டு மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.இதுகுறித்து ஐ.நா. சபையின் அகதிகள் மறுவாழ்வுத் துறைத் தலைவர் அண்டோனியா கட்ரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிரியாவில் உள்நாட்டுப் போர் காரணமாக 2011 முதல் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். இதுவரை 30 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 10 லட்சம் பேர் அகதிகளாகி உள்ளனர்.
லெபனானில் 10,14,000 பேரும் துருக்கியில் 8,15,000 பேரும் ஜோர்டானில் 6,08,000 பேரும் அகதிகள் முகாம்களில் வாழ்கின்றனர். இவர்கள் தவிர ஈராக், எகிப்து உள்ளிட்ட நாடுகளிலும் லட்சக்கணக்கானோர் உள்ளனர். உள்நாட்டிலேயே 65 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக சிரியாவின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் புகலிடம் தேடி வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
ஐ.நா. புள்ளிவிவரப்படி அகதிகள் மக்கள் தொகையில் சிரியா முதலிடத்தில் உள்ளது. பாலஸ்தீனம் இரண்டாம் இடத்தில் உள்ளது. சிரியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 1,91,000 பேர் பலியாகி உள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் அதிபர் ஆசாத் படைக்கும் இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) படைக்கும் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. சிரியாவையும் இராக்கையும் இணைத்து புதிய இஸ்லாமிய நாடு உருவாக்கப்படும் என்று ஐ.எஸ். அறிவித்துள்ளது. தற்போது ஐ.எஸ். படைக்கு எதிராக அமெரிக்கா களம் இறங்கியுள்ளது. ஆனால் அதிபர் ஆசாத்துடன் ஒருபோதும் இணைந்து செயல்பட மாட்டோம் என்று அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.