இலங்கை அமைச்சரவையில் இரண்டு தமிழர்கள் வியாழக்கிழமை துணை அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். இன்னும் ஒரு மாதத்தில் மாகாணத் தேர்தல் நடைபெற இருக்கின்ற தருணத்தில் இவர்களுக்குப் பதவி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் ஊவா மாகாணத்தில் செப்டம்பர் 20ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு தமிழர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தமிழர்கள் இருவருக்குத் துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பிரபா கணேசன் மற்றும் பி.திகம்பரம் ஆகிய இருவர் வியாழக்கிழமை அதிபர் ராஜபக்சவின் இல்லத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.
இவர்களில் 'டெமாக்ரடிக் பீப்பிள்ஸ் காங்கிரஸ்' கட்சியைச் சேர்ந்த பிரபா கணேசன் தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துணை அமைச்சராகவும், தேசிய தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த பி.திகம்பரம் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒற்றுமை துணை அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.
இவர்கள் இருவரும் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து கட்சி மாறினர்.
இவர்கள் இருவரும் துணை அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து இலங்கை அமைச்சரவையில் துணை அமைச்சர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 67 ஆக உள்ளது. 2016ம் ஆண்டு பொதுத் தேர்தல் மற்றும் அதிபர் தேர்தல் ஆகியவை நடைபெறவிருக்கின்றன.
அந்தத் தேர்தல்களில் ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள் எப்படியிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளும் முன்னோட்டமாக, ஊவா மாகாணத் தேர்தல் பார்க்கப்படுகிறது. எனினும், ராஜபக்ச அடுத்த ஆண்டே இவ்விரு தேர்தல்களையும் நடத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.