உலகம்

அமெரிக்க பத்திரிகையாளர் போலே படுகொலை: ஐ.நா. கடும் கண்டனம்

செய்திப்பிரிவு

இராக்கில் தங்களது இயக்கத்தினர் மீது அமெரிக்கா நிகழ்த்தி வரும் தாக்குதல்களுக்கு பழி வாங்குவதாகக் கூறி, அமெரிக்க பத்திரிகையாளரை ஐ.எஸ்.ஐ.எஸ். படுகொலை செய்துள்ளது வெறுக்கத்தக்க குற்றமாகும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் -கி மூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிரியா உள்நாட்டு பிரச்சினைகள் குறித்து செய்தி சேகரித்து வந்த அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலே என்பவர், கடந்த 2012-ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டார்.

தற்போது இராக் மற்றும் சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு பிரச்சினைகளில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கும்படியாக, கடத்தப்பட்ட அமெரிக்கப் பத்திரிகையாளர் படுகொலை செய்யப்படும் கொடூரமான வீடியோ காட்சியை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸின் இந்தச் செயலுக்கு தற்போது சர்வதே அளவில் எதிர்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்- கி மூன் கூறும்போது, "பத்திரிகையாளர் போலேவின் படுகொலை மிகவும் கொடூரமானது. தனி நாடு அமைக்க நினைக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள், இராக் மற்றும் சிரியாவில் உள்ள மக்களை படுகொலை செய்து வருகின்றனர்.

தற்போது வெளியாகி உள்ள பத்திரிகையாளர் படுகொலை சம்பவத்தின் காட்சி மிகவும் கொடூரமானது. இவை வெறுக்கத்தக்க குற்றமாக பார்க்க வேண்டியது. இதுபோன்ற கொடூரங்களில் ஈடுபடுவோர்களை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும்" என்றார்.

மேலும், கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்ட போலேவின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக பான் கி மூன் கூறினார்.

SCROLL FOR NEXT