உலகம்

ரூ.232 கோடிக்கு விற்பனையானது பெராரி கார்: அமெரிக்காவில் நடந்த ஏலத்தில் புதிய சாதனை

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் இதுவரை இல்லாத அளவாக பெராரி கார் ஒன்று ரூ.232.4 கோடிக்கு விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.

கலிபோர்னியா மாகாணம் மான்டெரே நகரில் போன்ஹாம்ஸ் ஏல நிறுவனம் சார்பில் பழமையான கார்கள் ஏலம் விடப்பட்டன. இதில், கடந்த 1962-ல் தயாரிக்கப்பட்ட சிவப்பு நிற பெராரி ‘250 ஜிடிஓ பெர்லினேட்டா’ என்ற கார் ரூ.232.4 கோடிக்கு விற்பனையானது. இதன்மூலம் இதுவரை ஏலத்தில் அதிக விலைக்கு விற்பனையான கார் என்ற சாதனையை படைத்துள்ளது இந்த கார். ஆனால் வாங்கியவர் பற்றிய விவரம் வெளியிடப்படவில்லை.

கடந்த ஆண்டு பிரிட்டனில் நடைபெற்ற ஏலத்தில், 1954-ல் தயாரிக்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் டபிள்யூ196ஆர் பார்முலா 1 மாடல் கார் ரூ.183 கோடிக்கு விற்பனையானது. இந்த சாதனையை பெராரி கார் முறியடித்துள்ளது. இந்தக் காரின் முதல் சொந்தக்காரர் பிரான்ஸ் கார் பந்தய வீரர் ஜோ ஸ்க்லெசர். இவர் தனது நண்பர் ஹென்ரி ஓரில்லருடன் இணைந்து 1962-ல் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்றார். இருவரும் இணைந்து பங்கேற்ற 2-வது பந்தயத்தின்போது, ஒரு கட்டிடத்தின் மீது மோதி விபத்தில் சிக்கி ஓரில்லர் இறந்தார்.

விபத்தில் சேதமடைந்த இந்த காரை சரி செய்து இத்தாலியைச் சேர்ந்த பாலோ கொலம்பு என்பவருக்கு ஸ்க்லெசர் விற்றுவிட்டார். அதன்பிறகு எர்னேஸ்டோ பிரினோத், பேப்ரிஜியோ வயலட்டி உள்ளிட்ட பலரிடம் கைமாறிய இந்த கார் கடைசியாக மாரனெல்லோ ரோஸோ நிறுவனத்தின் கைக்கு வந்தது. இந்நிறுவனம்தான் இப்போது இந்த காரை ஏலத்தில் விற்பனை செய்துள்ளது.

SCROLL FOR NEXT