இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளை மாளிகைக்கு அழைப்பது என்று அதிபர் பராக் ஒபாமா எப்படி முடிவு எடுத்தார் என்றும், அது தொடர்பான ஆவணங்களை வழங்குமாறும் அமெரிக்க அரசுக்கு அந்நாட்டு சீக்கியர் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
நியூயார்க்கைச் சேர்ந்த சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு (எஸ்எப்ஜே), தகவல் பெறும் சுதந்திர சட்டத்தின் (எப்ஓஐஏ) கீழ் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளது. இதுகுறித்து எஸ்எப்ஜே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
குஜராத் கலவரத்தின் போது முதல்வராக இருந்த மோடி கலவரத்தை தடுக்கத் தவறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மனித உரிமையை மீறியதாகக் கூறி மோடிக்கு விசா வழங்க கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்க அரசு தடை விதித்தது.
இந்நிலையில், இந்தியப் பிரதமர் என்ற முறையில் மோடி வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு வர உள்ளார். அப்போது வெள்ளை மாளிகையில் நடைபெறும் உச்சி மாநாட்டிலும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எந்த சட்டத்தின் கீழ் மோடிக்கு விசா வழங்க விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது என்ற விவரத்தை பொதுமக்களுக்குதெரியப்படுத்த வேண்டும்.
எனவே, கடந்த 2005 ஆகஸ்ட் மாதம், மோடிக்கு விசா வழங்க தடை விதிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களையும் வரும் செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்தது தொடர்பான ஆவணங்களையும் வழங்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.
எப்ஓஐஏ சட்டத்தின் கீழ் வைக்கப்படும் இதுபோன்ற கோரிக்கைகளுக்கு 20 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க சீக்கிய அமைப்பு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிராகவும் மனித உரிமையை மீறியதாக கடந்த ஆண்டு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது.