இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சிக்கு வாக்களித்தால் தமிழ் ஈழம் மலர்ந்துவிடும் என சிங்கள மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரம் செய்ததால்தான் மகிந்த ராஜபக்ச கட்சி வெற்றி பெற்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் (டிஎன்ஏ) தலைவர் ஆர்.சம்பந்தன் குற்றம்சாட்டி உள்ளார்.
இலங்கையில் அதிபர் மைத்ரி பால சிறிசேனா தலைமையிலான இலங்கை சுதந்திர கட்சியும் (எஸ்எல்எப்பி), பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் (யுஎன்பி) இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இவ்விரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டு தோல்வி அடைந்தன. இதனால் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுனா (எஸ்எல்பிபி) அதிக இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது.
தேர்தல் முடிவு தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் பேசியதாவது:
உள்ளாட்சித் தேர்தலில் நாட்டு மக்கள் தீர்ப்பு வழங்கி உள்ளனர். ஜனநாயக நாட்டில் மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். எனினும், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற ராஜபக்ச தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி 44.69 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. தனித்தனியாக போட்டியிட்ட ஆளும் கூட்டணிக்கு ஒட்டுமொத்தமாக 45.99 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. இதுதவிர மற்ற கட்சிகள் பெற்ற வாக்குகளையும் சேர்த்தால் இலங்கை பொதுஜன பெரமுனாவுக்கு எதிராக 55.31 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
மேலும் கடந்த 2015-ல் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சவுக்கு 47.58 சதவீத வாக்குகள் கிடைத்தது. இதனுடன் ஒப்பிடும்போது, இப்போது அவரது வாக்கு குறைந்துள்ளது. 2015-ல் நடந்த அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல், இப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தல் ஆகிய எந்தத் தேர்தலிலும் அவரது கட்சி 50 சதவீதத்தைத் தாண்டவில்லை. எனவே, எஸ்எல்பிபி கட்சி உள்ளாட்சித் தேர்தல் வெற்றியைக் கொண்டாடுவதற்கு ஒன்றும் இல்லை.
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் நாடாளுமன்றம் செயல்பட முடியாது. அதிபர் தேர்தல் முடிவின் அடிப் படையில்தான் நாடாளுமன்றம் செயல்பட முடியும். உள்ளாட்சித் தேர்தல் வெற்றியின் அடிப்படையில், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மீற முடியாது.
உள்ளாட்சித் தேர்தலின்போது நடந்த பிரச்சாரம் குறித்து இந்த அவையில் ஒருசில கருத்துகளை கூற விரும்புகிறேன். இந்தத் தேர்தலில் ஆளும் கட்சிகள் வெற்றி பெற்றால், தமிழ் ஈழம் மலர்ந்துவிடும் என்றும் இந்த விவகாரத்தில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் ராஜபக்ச பிரச்சாரம் செய்தார். தமிழ் ஈழம் மலர்வதைத் தடுக்க எங்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று ராஜபக்ச பிரச்சாரம் செய்தார். சிங்களர்கள் வசிக்கும் கிராமங்கள் மற்றும் கோயில்களில் இதுபோன்ற பிரச்சாரம் நடைபெற்றது. அப்பாவி மக்களை ஏமாற்றி பொய் பிரச்சாரம் செய்து ராஜபக்ச வாக்குகளைப் பெற்றுள்ளார்.
நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று கேட்கவில்லை. ஒரே நாடாக இருக்க வேண்டும். ஆனால் தமிழர்களுக்கு ஏற்கக் கூடிய அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும். குறிப்பாக அதிகாரப் பகிர்வு வழங்க வேண்டும். இதைத்தான் தேர்தல் அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளோம். தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தனியாக பிரிக்க வேண்டும் என்று நாங்கள் பிரச்சாரம் செய்யவில்லை.
ராஜபக்ச தொடர்ந்து இவ்வாறு பிரச்சாரம் செய்தால் தமிழ் ஈழம் மலரும். ஆனால் அதற்கு நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம். தாமரை மலர வேண்டும் என்ற அவர்களுடைய நிலைப்பாடுதான் காரணமாக இருக்கும். பொய் பிரச்சாரம் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியைக் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.