காஸாவில் இன்று போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வரவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இஸ்ரேல் அங்கு வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலியாயினர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலியாயினர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.
இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. ஐ.நா. உள்பட சர்வதேச சமூகத்தின் முயற்சியால், இஸ்ரேலுடன் 72 மணி நேர போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்குமாறு பாலஸ்தீன தலைவர்களுக்கு எகிப்து ஆலோசனை கூறியது. இதனை பாலஸ்தீன தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர். இந்த போர் நிறுத்தம் இன்று மதியம் 1 மணி முதல் அமலுக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் காஸாவின் கடற்கரைப் பகுதியில், இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் பலியானதாக காஸாவின் சுகாதரத்துறை செய்தித் தொடர்பாளர் அஷ்ரப்-அல்-கேத்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து இஸ்ரேல் வானொலி ஒன்று கூறும்போது, "இஸ்ரேல் பகுதியில் ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி தான் இந்த தாக்குதல்" என்று இஸ்ரேல் ராணுவம் குறிப்பிட்டதாக கூறி உள்ளது.
கடந்த ஒரு மாதமாக நீடிக்கும் போரில் இதுவரை 1900 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 67 பேர் உயிரிழந்துள்ளனர்.