உலகம்

பேஸ்புக்கில் பகிர செல்ஃபி எடுக்கும்போது ஏற்பட்ட விபரீதம்: துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இளைஞர் பலி

செய்திப்பிரிவு

மெக்ஸிகோவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளார். பேஸ்புக்கில் படத்தை போடும் ஆர்வத்தினால் இந்த விபரீதம் நடந்துள்ளது.

தன்னை தானே புகைப்படம் எடுத்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவற்றை பதிவேற்றம் செய்தல் என்பது தற்போது இளைய தலைமுறையினர் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. அதுவே ஓர் இளைஞரின் உயிரைப் பலி வாங்கியுள்ளது.

ஆஸ்கர் அட்டிரோ அக்யூலர் (21) என்ற இளைஞர் தன்னை விதவிதமாக படம் எடுத்து அவற்றை பேஸ்புக்கில் போடுவதில் தீவிர ஆசை கொண்டவர். விலை உயர்ந்த பைக், கார்களில் இருப்பது, அழகான பெண்களுடன் இருப்பது என பல புகைப்படங்களை போட்டு அசத்தி வந்தார்.

இந்நிலையில் அவருக்கு ஒரு விபரீத ஆசை தோன்றியது. துப்பாக்கியால் தன்னை தானே தலையில் சுட்டுக் கொள்வது போன்ற புகைப்படம் எடுத்து அதையும் பேஸ்புக்கில் போட வேண்டும் என்பதே அந்த ஆசை. தனது விருப்பத்தை நிறைவேற்ற உடனே செயலில் இறங்கினார்.

எங்கிருந்தோ ஒரு துப்பாக்கியை கடனாக வாங்கி வந்து, அதை தனது தலையில் குறி வைத்துக் கொண்டு புகைப்படம் எடுக்க முயற்சித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கியில் இருந்து குண்டு வெடித்து ஆஸ்கரின் தலையில் பாய்ந்தது.

துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் வந்த பார்த்தபோது ஆஸ்கர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து அவர் உடனடியாக ஆம்புலன்ஸுக்கும், போலீஸுக்கும் தகவல் தெரிவித்தார். எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஆஸ்கர் உயிரிழந்தார்.

துப்பாக்கியில் குண்டு இருப்பது தெரியாமலேயே ஆஸ்கர் அதனை தலையில் வைத்து சுட்டுக் கொண்டதுதான் அவர் உயிரிழக்க காரணம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT