உலகம்

அமெரிக்காவில் பொறியியல் கல்வி: சீன, இந்திய மாணவர்கள் ஆதிக்கம்

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் பொறியியல் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் 70 சதவீதம் பேர் இந்தியர் மற்றும் சீனர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. மாணவர் மற்றும் பரிமாற்ற வருகையாளர் திட்ட அமைப்பு இது தொடர்பான காலாண்டு அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

இந்த அறிக்கையின்படி, 2014 ஜூலை 8-ம் தேதி நிலவரப்படி 9 லட்சத்து 66 ஆயிரத்து 333 வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவிலுள்ள 9,000 கல்லூரிகளில் பயில்கின்றனர். அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் 75 சதவீதம் பேர் ஆசியாவைச் சேர்ந்தவர்கள். அதில், 28 சதவீதத்தினர் சீனர்கள். கடந்த ஜூலை மாத நிலவரப்படி 2,70,596 சீன மாணவர்கள் அமெரிக்காவில் பயில்கின்றனர்.

அறிவியல் துறை

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (எஸ்டிஇஎம்) பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் 3.50 லட்சம் பேர். இதில், 69 சதவீதம் பேர் ஆண்கள். இத்துறை மாணவர்களில் 85 சதவீதத்தினர் ஆசியாவைச் சேர்ந்தவர்கள்.அமெரிக்காவில் பொறியியல் பயிலும் சர்வதேச மாணவர்களில் 70 சதவீதம் பேர் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள். எஸ்டிஇஎம் பிரிவுகளில் பெரும்பாலானவர்கள் பொறியியலைப் பயில்கின்றனர்.

அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் சீனா முதலிடம் பெறுகிறது. இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. தென் கொரியா, சவுதி அரேபியா, கனடா, ஜப்பான், தைவான், வியட்நாம், மெக்ஸிகோ, பிரேசில் ஆகிய நாடுகள் முறையே 3 முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT