காஸா மீதான தாக்குதலை தீவிரப் படுத்தும் விதத்தில், போர்முனைக்கு கூடுதலாக 16 ஆயிரம் வீரர்களை இஸ்ரேல் அனுப்புகிறது. இதன் மூலம் ஹமாஸுடன் போரில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேல் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 86 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
காஸா-இஸ்ரேல் போர் 24 நாட்களைக் கடந்துள்ளது. காஸாவில் இஸ்ரேல் தாக்குதலால் தினமும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் பலியாகின்றனர். இதுவரை 1,360 பாலஸ்தீனர்கள் உயிரிழந் துள்ளனர். 6,000-க்கும் அதிகமா னோர் காயமடைந்துள்ளனர்.
காஸாவிலிருந்து ஏவப்படும் ராக்கெட்டுகளைத் தடுத்து நிறுத்தும் இலக்கோடு இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. பிறகு, ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப் பாதைகளைத் தகர்க்க, தன் தாக்குதலை அதிகரித்தது. இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் இயக்கத்தினர் தாக்குதல் நடத்து வதற்கு இந்த சுரங்கப்பாதைகளே காரணம் என்பதால், அவற்றை முழுவதுமாக அழிக்க இஸ்ரேல் குண்டுமழை பொழிகிறது.
எகிப்துக்கு குழு
போர் நிறுத்த சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ள எகிப்துக்கு, இஸ்ரேல் பிரதிநிதிகள் குழு சென்றுள்ளது. கடந்த 15-ம் தேதி எகிப்தின் சமரச முயற்சியை ஏற்ற இஸ்ரேல் தற்காலிகமாக தனது தாக்குதலை நிறுத்தி வைத்தது. ஆனால், ஹமாஸ் இயக்கத்தினர் அதை ஏற்க மறுத்ததால், அடுத்த நாளிலிருந்து மீண்டும் தாக்கு தலைத் தொடங்கியுள்ளது.
இஸ்ரேல் தரப்பில் 2 பொது மக்கள் 56 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, காஸாவிலுள்ள ஐ.நா. பள்ளி தாக்குதலுக்கு இலக்கானது குறித்து விசாரணை நடத்த இஸ்ரேல் உறுதியளித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் அரசு செய்தித் தொடர்பாளர் மார்க் ரெகெவ் கூறும்போது, “அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். தவறுதலாக நாங்கள் தாக்கியிருந்தால், நிச்சயமாக மன்னி்ப்புக் கோருவோம்” என்றார்.
ஹமாஸ் குற்றச்சாட்டு
‘மனிதாபிமான அடிப்படையில் நான்கு மணி நேர போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நேரத்தில், சந்தைப் பகுதியில் இஸ்ரேல் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது’ என ஹமாஸ் இயக்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.