ஐஎஸ் தலைவர் பாக்தாதி உயிருடன் இருப்பதாகவும், கடந்த ஆண்டு மே மாதம் நடத்த தாக்குதலில் பாக்தாதிக்கு காயம் ஏற்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிரியாவின் ராக்கா அருகே கடந்த ஆண்டு ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அப்போது சுகோய் ரக போர் விமானங்கள் மூலம் அவர்கள் குழுமியிருந்த பகுதியில் சுமார் 10 நிமிடம் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் 30 முக்கிய தளபதிகளும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஐஎஸ் அமைப்பின் தலைவர் இப்ராஹிம் அபு பக்கர் அல் பாக்தாதியும் உயிரிழந்திருப்பதாக ரஷ்யாவும், அமெரிக்காவும் கூறியது.
எனினும் பாக்தாதி இறந்ததற்கான எந்த உறுதியான தகவலும் இதுவரை கிடைக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் பாக்தாதிக்கு அத்தாக்குதலில் வெறும் காயம் மட்டுமே எற்பட்டுள்ளதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்கா உளவுத் துறை அதிகாரிகள் தரப்பில், "சிரியாவின் ராக்கா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாக்தாதிக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர் தற்போது தனது வீரர்களுக்கு கட்டளைகள் வழங்க முடியாத நிலையில் செயலற்று இருக்கிறார். பாக்தாதிக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் தரும் நிலையில் இல்லை" என்று கூறியுள்ளனர்.