பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகியதற்காக அமெரிக்காவை சாடியுள்ளார் ஹாலிவுட் நடிகரும் இயக்குநருமான ராபர்ட் டி நீரோ.
ஜூன் 2017ல், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவெடுத்தார். தொடர்ந்து சூழலியல் ஆர்வலர்களின் விமர்சனத்தை அவர் சந்தித்து வருகிறார். இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ துபாயில் நடைபெறும் பருவநிலை மாற்றம் பற்றிய 2018 உலக அரசாங்க உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசும்போது, டொனால்ட் ட்ரம்ப்பை விமர்சித்துள்ளார்.
அவர் பேசுகையில், வெப்பநிலை உயர்வை தடுக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எடுத்துள்ள முயற்சிகளை பாராட்டியுள்ளார். நவம்பர் 2016ல், பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் அரேபிய தேசம் ஐக்கிய அரபு எமிரெட்ஸ் என்றும், மேலும் வெப்பம் 2 டிகிரி செல்சியஸ் என்கிற அளவை தாண்டாமல் பார்த்துக் கொள்ள அவர்கள் உறுதி செய்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் பருவநிலை மாற்றம் பற்றிய தனது (அமெரிக்கா) நாட்டின் சூழல் சரியாக இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.
"உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு நமது பூமிக்கு நீடித்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பிடிவாதம் தான் காரணம். இப்போது எனது நாட்டில் சூழல் வித்தியாசமாக இருக்கிறது. விரைவில் அதை சரி செய்வோம்" என்று ராபர்ட் டி நீரோ கூறினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், 2050ஆம் ஆண்டுக்குள், தங்கள் நாட்டின் 50 சதவித மின் தேவையை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகப் பெற உறுதியெடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.