வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் வரலாற்றில் முதல் முறையாக தென் கொரியாவுக்கு செல்ல இருக்கிறார்.
தென்கொரியாவில் இந்த வாரம் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் வடகொரியாவின் தொழிலாளர் கட்சியின் முக்கிய உறுப்பினராக கிம் யோ ஜாங் பங்கேற்கிறார்.
கிம் யோ ஜாங் பயணத்தை வடகொரியா அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
வடகொரியாவின் தொடர் ஆணு ஆயுத சோதனை காரணமாக தென் கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் கடந்த இரு ஆண்டுகளாக மோதல் போக்கு வலுத்து வந்தது. வடகொரியாவின் அத்துமீறல்களை முடிவுக்குக் கொண்டுவர தென் கொரியா அமெரிக்காவுடன் இணைந்து ராணுவ கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டது. இதன் காரணமாக கொரிய தீபகற்பப் பகுதியில் பதற்றம் நிலவி வந்தது.
இந்த நிலையில், தென் கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கள் நாடும் பங்கேற்க விரும்புவதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த புத்தாண்டு தினத்தில் அறிவித்தார். இது, தென் கொரியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்தையும் வியப்பில் ஆழ்த்தியது.
மேலும் இது தொடர்பான பேச்சுவார்த்தையில் தங்கள் நாட்டு அதிகாரிகளை அனுப்பத் தயாராக உள்ளதாக வடகொரியா கூறியது. இதனைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பிலும் வெள்ளைக் கொடி காட்டப்பட்டது.
கிம் யோ ஜாங்கின் தென்கொரிய பயணம் வடகொரியா - தென் கொரிய உறவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.