வரலாற்று சிறப்புமிக்க பயணமாக பாலஸ்தீனம் நாட்டுக்கு இன்று இந்தியப் பிரதமர் மோடி சென்றடைந்தார்.
பாலஸ்தீனம், ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) பாலஸ்தீனத்தின் ரமல்லா நகரத்துக்கு சென்றடைந்தார்.
பாலஸ்தீனத்துக்கு வருகை தரும் முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பயணத்தில் பாலஸ்தீன மக்களுக்கான இந்தியாவின் ஆதரவை மோடி அறிவிக்கவுள்ளார். மேலும் இரு நாடுகளின் உறவு குறித்து பாலஸ்தீன அதிபர் மம்மூத் அப்பாஸ் உடன் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார்.
மோடியின் பயணம் குறித்து பாலஸ்தீன அதிபர் மம்மூத் அப்பாஸ், "இந்திய பிரதமர் மோடியுடன் சமீபத்தில் நடந்த நிகழ்வுகள், அமைதி பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறோம்.
இந்த பிராந்தியத்தின் சமாதான முயற்சிகளில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க முடியும். மேலும் பாலஸ்தீனம் இந்தியா இரு நாடுகளின் உறவு குறித்தும், பொருளாதார அம்சங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்” என்றார்.
இந்த சந்திப்பில் பல முக்கிய ஓப்பந்தகளில் இரு தலைவர்களும் கையெழுத்திடவுள்ளனர். அதன் பிறகு கூட்டாக இரு நாட்டு தலைவர்களும் செய்தியாளர்களை சந்திவுள்ளனர்.
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தது முதல், அந்த பிராந்தியத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இதில் இந்தியா பாலஸ்தீனத்துக்கு ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.