உலகம்

ஊழல் வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் காலீதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறை

பிடிஐ

வங்கதேச தேசியவாத கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான காலீதா ஜியாவுக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜியா இரண்டு முறை வங்கதேச பிரதமராக இருந்தவராவார்.

2001- 2006 காலகட்டத்தில் அவர் பிரதமராக இருந்தபோது அவருடைய பெயரில் வங்கதேச தலைநகர் டாக்காவில் ஜியா ஆதரவற்றோர் ட்ரஸ்ட் செயல்பட்டு வந்தது. அந்த ட்ரஸ்ட்டுக்கு சட்டவிரோதமாக 2,52,000 டாலர் பெற்றதாக புகார் எழுந்தது.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே காலீதாவின் மகனுக்கும், மேலும் 5 பேருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேச ஊழல் தடுப்பு அமைப்பானது, ஜியா ஆதரவற்றோர் மையம் மற்றும் ஜியா கருணை ட்ரஸ்ட் மூலமாக பெரிய அளவிலான தொகை கையாடல் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று காலீதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

காலீதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை தொடர்ந்து வங்கதேசம் மற்றும் மேற்குவங்கத்தை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT