கன்டெய்னரில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டு, கப்பல் மூலம் கடத்திவரப்பட்ட 35 பேரில் 34 பேர் மயங்கிய நிலையிலும், ஒருவர் பிணமாகவும் பிரிட்டன் துறைமுகத்தில் சனிக்கிழமை மீட்கப்பட்டனர். பெல்ஜியம் நாட்டின் ஜீபுருக்கீ துறைமுகத்தில் இருந்து பிரிட்டனின் தில்புரி துறைமுகத்துக்கு வந்த கன்டெய்னர்களை பிரிட்டன் துறைமுக அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு கன்டெய்னரில் இருந்து முனகல் சத்தம் கேட்டது. அந்தக் கன்டெய்னரை அதிகாரிகள் திறந்து பார்த்த போது, 13 குழந்தைகள் உட்பட 35 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். அதில் பெரும்பாலானவர்கள் மயங்கிக் கிடந்தனர். ஓர் ஆண் இறந்து கிடந்தார்.
அவர்கள் அனைவரும் பிரிட்டனுக்கு சட்ட விரோதமாக குடியேற முயன்றவர்கள். அவர்களை கன்டெய்னரில் அடைத்து அழைத்து வந்துள்ளனர். கன்டெய்னருக்குள் மிகக்குறைந்த அளவே காற்று கிடைத்துள்ளது. குடிக்க நீரும் இல்லை. இதனால் அவர்களுக்கு நீரிழப்பு ஏற்பட்டுள்ளது. பெண்கள் குழந்தைகள் உட்பட பெரும்பாலானவர்கள் மயங்கி விட்டனர். ஓர் ஆண் இறந்து விட்டார்.
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பி அண்டு ஓ கப்பலில் மொத்தம் 64 கன்டெய்னர்கள் சனிக்கிழமை காலை கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 30 கன்டெய்னர்கள் மட்டுமே திறந்து பார்க்கப்பட்டுள்ளன. மற்ற கன்டெய்னர்களிலும் மனிதர்கள் அடைக்கப்பட்டுள்ளனரா என்பதைக் கண்டறிவதற்காக, அவற்றை பிரிட்டன் அதிகாரிகள் திறந்து பார்த்து சோதனையிட்டனர்
3,600 மைல்
பி அண்டு ஓ கப்பல் நிறுவனம் இது தொடர்பாகக் கூறும்போது, “கப்பலில் ஏற்றப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் கன்டெய்னர் கப்பல்துறைக்கு வந்தது. இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு பயணத்தைத் தொடங்கிய கப்பல் 8 மணிநேர இரவுப் பயணத்துக்குப் பின் தில்புரி வந்து சேர்ந்தது” எனத் தெரிவித்துள்ளது. இக்கப்பல் 3,600 மைல் தூரம் பயணித்துள்ளது.
பிரிட்டன் போலீஸார் இவ்வழக்கை கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ஆப்கானியர்கள்
கடத்தப்பட்டவர்கள் இந்திய துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்கள் என முதலில் நம்பப்பட்டது. மொழிப்பிரச்சினை காரணமாக, மீட்கப்பட்டவர்களிடம் விசாரணை தாமதமானது. பின்னர் அவர்கள் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சீக்கியர்கள் எனத் தெரியவந்துள்ளது.
முதல் முறை அல்ல
பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாகக் குடியேற மற்ற நாட்டவர்கள் முயல்வது இது முதல் முறை அல்ல. எல்லைப் பாதுகாப்புப் படை அளித்த தகவல்களின் அடிப்படையில், கடந்த 2012-13-ம் ஆண்டில் மட்டும் ஆங்கிலக் கால்வாய் வழியாக 11 ஆயிரம் முறை சட்டவிரோதக் குடியேற்ற முயற்சிகள் நடைபெற்றுள்ளதாகவும், அவை தடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சீனர்கள் பலி
கடந்த 2000-வது ஆண்டில், கன்டெய்னருக்குள் பதுங்கி, பிரிட்டனின் டோவர் துறைமுகத்துக்கு வர முயன்ற 58 சீனர்கள் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 2013 ஜூலையில், 15 பேரை டேங்கருக்குள் மறைத்து, கப்பலில் டோவர் துறைமுகத்துக்கு சட்டவிரோதமாகக் கொண்டு வந்த இருவரை பிரிட்டன் போலீஸார் கைது செய்தனர்.
இம்மாத தொடக்கத்தில், எத்தியோப்பியாவிலிருந்து 16 பேர், வாகனம் ஒன்றில் குளிர்சாதனப் பகுதியில் பதுக்கி கொண்டு வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் லண்டனில் கைது செய்யப்பட்டனர். கடந்த ஜூன் மாதம், பிரிட்டனில் சட்ட விரோதமாகக் குடியேற முயன்ற 8 ஆப்கானியர்கள் ஆங்கிலக் கால்வாயை படகில் கடக்க முயன்று, நடுக்கடலில் தத்தளித்தனர். அவர்களை பிரிட்டன் அதிகாரிகள் மீட்டனர்.
பரிதவிக்கும் ஆப்கன் சீக்கியர்கள்
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் இந்து-சீக்கிய சமூகத்தின் துணைத் தலைவர் ரவேல் சிங் கூறும்போது, “இச்சம்ப வம் குறித்து ஊடகங்களின் மூலமே தகவல் கிடைத்தது. இதில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகிறேன். கூடுதல் தகவல்கள் எனக்கு அவசரமாகத் தேவைப்படுகின்றன. ஆப்கானிஸ்தானில் எங்கள் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
இங்குள்ள மக்களால் நாங்கள் மோசமாக நடத்தப்படுகிறோம். எங்கள் குழந்தைகள் பள்ளி செல்ல முடியவில்லை. எங்கள் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. எனவே, இங்கிருந்து வெளியேற சீக்கியர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். ஏற்கெனவே இங்கிருந்து வெளியேறிய சீக்கியர்கள் ஆஸ்திரேலியா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்” என்றார்.