பயங்கரவாதம் தொடர்பான தமது நாட்டின் மீதான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
மேலும், இரு நாடுகளுக்கு இடையே ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்காமல் வெறுமனே குற்றம்சாட்டுவது ஏற்புடையது அல்ல என்று பாகிஸ்தான் விமர்சித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் செவ்வாய்க்கிழமை ராணுவ முகாம்களில் வீரர்கள் மத்தியில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவுடன் நேருக்கு நேர் மோத பலமில்லாததால் பயங்கரவாதம் மூலம் பாகிஸ்தான் மறைமுகமாகப் போரிட்டு வருகிறது என்று குற்றம்சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் வகையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டஸ்னிம் அஸ்லாம் இன்று கூறும்போது, "இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் உயர்மட்ட அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், சிக்கல்கள் எழுவது மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது.
கடந்த மே மாதம் இந்தியாவுக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் பயணித்தது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவுக்கு வலுசேர்ப்பதாக அமைந்தது. இதன்மூலம் சுமுகமானச் சூழல் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தான் என்றுமே பயங்கரவாதத்துக்கு எதிரான நாடுதான். பயங்கரவாதிகளின் அனைத்து நடவடிக்கைகளை முறியடிக்க பாகிஸ்தான் போராடுகிறது. பயங்கரவாதத்தால் 55,000 மக்களை பாகிஸ்தான் இழந்துள்ளது. உலகிலேயே பயங்கரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான்தான்.
ஆனால், பயங்கரவாதம் குறித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு அடிப்படை ஆதாரமற்றதாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்சினைகளை மையப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்த நாம் முயற்சிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல" என்றார் அவர்.