சிகாகோ: இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.
சாட்ஜிபிடி செயலியை உருவாக்கிய ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்தவர் சாம் ஆல்ட்மேன். யூதரான இவர் பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார்.
தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் சாம் ஆல்ட்மேன் பதிவிட்டுள்ளதாவது: இஸ்லாமிய மற்றும் அரபு (குறிப்பாக பாலஸ்தீன்) நாடுகளைச் சேர்ந்த, சக தொழில்நுட்ப ஊழியர்களிடம் நான் பேசியபோது, அவர்கள் தங்களுடைய சமீபத்திய அனுபவங்களாலும், எதிர்தாக்குதல் குறித்த பயத்தாலும் மற்றும் தொழில் வாய்ப்புகள் பாதிப்பு குறித்தும் மிகவும் சங்கடமாக உணர்கின்றனர். இந்த சக ஊழியர்களுக்கு ஆதரவாக நமது துறை ஒன்றிணைய வேண்டும்.
இது ஒரு கொடூரமான காலகட்டம். உண்மையான மற்றும் நீடித்த அமைதி கிடைக்கும் என்று நான் தொடர்ந்து நம்புகிறேன். அதே நேரம் நாம் ஒருவரை ஒருவர் இரக்கத்துடன் நடத்த வேண்டும்” இவ்வாறு சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார்.
அவரது இந்த பதிவில் நெட்டிசன் ஒருவர், “சக யூத ஊழியர்கள் எப்படி இருக்கிறார்கள்?” என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள சாம் ஆல்ட்மேன், “நான் ஒரு யூதர். யூதர்களுக்கு எதிரான போக்கு என்பது உலகம் முழுவதும் அதிகரித்து வரும் ஒரு முக்கியப் பிரச்சினை என்று நம்புகிறேன். நமது துறையில் இருக்கும் ஏராளமான மக்கள் எனக்கு ஆதரவாக நிற்பதையும் காண்கிறேன். அதற்கு நான் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன். ஆனால் ஒப்பீட்டளவில் அது இஸ்லாமியர்களுக்கு மிகவும் குறைவாகவே கிடைக்கிறது” என்று கூறியுள்ளார்.