இந்தியா – சீனா இடையே கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் கலாச்சார ரீதியிலான தொடர்புகள் குறித்த தகவல்கள் அடங்கிய கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலை பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரியும், சீன துணை அதிபர் லீ யுவான்சாவோவும் திங்கள்கிழமை வெளியிட்டனர்.
கி.பி. 7-ம் நூற்றாண்டில் புத்தரின் போதனைகள் அடங்கிய குறிப்புகளை சேகரிக்க வந்த சீனப் பேரறிஞர் யுவாங் சுவாங் காலம் முதல் இப்போது வரையிலான இரு நாடுகளுக்கு இடையேயான கலாச்சாரத் தொடர்புகள் குறித்து பல்வேறு தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இரு நாடுகளுக்கு இடையேயான இலக்கியம், வர்த்தகம், தூதரக உறவுகள் குறித்த தகவல்களும் இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளன. ஆங்கிலம் மற்றும் சீன மொழியில் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலை இந்தியா, சீனாவைச் சேர்ந்த அறிஞர்கள் தயாரித்துள்ளனர்.
இந்த கலைக்களஞ்சியம் தயாரிக்கும் யோசனையை 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அப்போதைய சீனப் பிரதமர் வென் ஜியாபோ தெரிவித்திருந்தார்.