முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துங்கள் என்று கூறியதற்காக தலாய் லாமா ஆன்மிக வழிகாட்டியே அல்ல என்று இலங்கை பவுத்தத் துறவி ஒருவர் சாடியுள்ளார்.
கலகோதத்தே ஞானசார என்ற பவுத்தத் துறவி இது பற்றிக் கூறும்போது, “தலாய் லாமாவிற்கு இலங்கையில் உள்ள உண்மையான நிலவரம் புரியவில்லை. இஸ்லாமிய தீவிரவாதிகளின் பிரச்சாரத்தில் அவர் வீழ்ந்து விட்டார், அவரை உலக பவுத்தத் தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
தலாய் லாமா என்பவர் மேற்கு நாடுகளினால் உருவாக்கப்பட்டவர், கத்தோலிக்கர்களுக்கு போப் எப்படியோ பவுத்தர்களுக்கு தலாய் லாமா என்று மேற்குலகம் நினைக்கிறது. ஆனால் எங்களைப் பொறுத்தவரை அவர் ஆன்மிக வழிகாட்டியல்ல” என்றார் அவர்.
மியான்மரில் பவுத்த வன்முறையைத் தூண்டி விடும் விராதுவுடன், இலங்கை பவுத்தத் துறவி ஞானசார ஒப்பிடப்படுகிறார். ஆனால் ஞானசார, இதனைக் கடுமையாக மறுத்து, “நாங்கள் இருவரும் சந்தித்தோம், இருவருமே அமைதிக்கான துறவிகளே, எங்கள் கைகளில் ரத்தக்கறை இல்லை” என்று கூறியுள்ளார்.
இலங்கையின் மிதவாத பவுத்தர்கள் தலாய் லாமாவை மிக்க மரியாதையான ஆன்மீக வழிகாட்டியாகப் பார்க்கின்றனர். ஆனால் சீனாவின் தயவில் உள்ள இலங்கை அவருக்கு விசா அளிக்க தொடர்ந்து மறுத்து வருகிறது.
இலங்கை அரசு பவுத்த தீவிரவாதத்தை அடக்கவில்லையெனில், அங்கு இஸ்லாமிய தீவிரவாதம் தலைதூக்கும் என்று இலங்கை தேசியவாதிகள் சிலர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.