உலகம்

இராக்கில் இருந்து 94 இந்தியர்கள் நாடு திரும்பினர்

செய்திப்பிரிவு

உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இராக்கில் இருந்து 94 இந்தியர்கள் திங்கள்கிழமை நாடு திரும்பினர். இந்த வார இறுதிக்குள் மேலும் 600 இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்கள் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியபோது, இராக்கில் பணியாற்றும் இந்தியர்களை பத்திரமாக அழைத்துவர இந்தியத் தூதரகம் சார்பில் நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.அந்தக் குழுக்கள் இந்தியர்கள் பணியாற்றும் இடங்களுக்கே சென்று அவர்கள் நாடு திரும்புவதற் கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றன என்றார்.

தூதரக அதிகாரிகளின் ஏற்பாட்டின்பேரில் நஜாப் நகரில் இருந்து 60 பேரும் கர்பாலா நகரில் இருந்து 30 பேரும் திங்கள்கிழமை நாடு திரும்பினர். இந்த வார இறுதிக்குள் மேலும் 600 பேர் நாடு திரும்ப உள்ளனர்.

தயார் நிலையில் விமானங்கள்

இராக்கில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக ஏர் இந்தியா சார்பில் 3 விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. போயிங் 747 ஜம்போ ஜெட் ரகத்தைச் சேர்ந்த 2 விமானங்களும் போயிங் 777 ரகத்தைச் சேர்ந்த ஒரு விமானமும் மத்திய அரசின் உத்தரவுக்காக காத்திருப்பதாக விமானப் போக்குவரத்துத் துறை வட்டாரங் கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT