பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் வீட்டை தேசிய பாரம்பரியச் சின்னமாக பாகிஸ்தான் அரசு அண்மையில் அறிவித்தது, இதற்காக பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு பெஷாவர் நகர மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
91 வயதாகும் நடிகர் திலீப் குமாரின் இயற்பெயர் யூசுப் கான். பாகிஸ்தானில் பிறந்த அவரின் பூர்விக வீடு பெஷாவர் நகரில் உள்ளது. திலீப் குமார் இந்தியாவில் வசித்து வருவதால் அவரது வீடு பராமரிப்பின்றி பழுதடைந்து வருகிறது.
அந்த வீடு தேசிய பாரம்பரியச் சின்னமாக மாற்றப்படும் என்று பாகிஸ்தான் அரசு அண்மையில் அறிவித்தது. இதற்காக நடவடிக்கை மேற்கொண்ட பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு பெஷாவர் நகர மக்கள் பாராட்டுகளைத் தெரிவித் துள்ளனர்.
“திலீப்குமாரின் வீடு பாரம் பரியச் சின்னமாக அறிவிக்கப் பட்டிருப்பதால் பெஷாவரின் புகழ் உலகமெங்கும் பரவியுள்ளது. இதன்மூலம் இந்திய, பாகிஸ்தான் உறவு மேம்படும்” என்று உள்ளூர்வாசியான ஜாரீப் தெரிவித்தார்.
திலீப் குமாரின் வீட்டை அருங்காட்சியமாக மாற்றிய பிறகு அவரையும் அவரது குடும்பத்தினரையும் அழைத்துவந்து காண்பிக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது திலீப் குமாரின் வீடு, அக்ரம் உல்லா என்பவருக்குச் சொந்தமாக உள்ளது. அந்த வீட்டை அரசுக்கு அளிக்க பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ரூ.8 கோடி வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இதுகுறித்து ஷகீல் வாகித் என்பவர் கூறியபோது, இந்தத் தொகைக்காக பொதுமக்களிடம் நன்கொடை வசூலித்து அரசிடம் அளிப்பேன் என்று தெரிவித்தார்.
திலீப் குமார் மட்டுமன்றி கபூர் குடும்பம், ஷாருக்கான் ஆகியோரும் பாகிஸ்தானை பூர்விகமாகக் கொண்டவர்கள் ஆவர்.