உலகம்

உலக மசாலா: பயணிகளைச் சிறை வைத்த பனிப் பொழிவு!

செய்திப்பிரிவு

சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலையில் அமைந்திருக்கிறது ஜெர்மாட் உல்லாச விடுதி. குளிர்காலத்தில் பனியை ரசிக்கவும் பனிச் சறுக்கு விளையாடுவதற்காகவும் உலகம் முழுவதிலுமிருந்து இங்கே பயணிகள் வருகிறார்கள். இந்த ஆண்டு எதிர்பாராத விதத்தில் மிகக் கடுமையான பனிப் பொழிவு. பல அடி உயரத்துக்கு பனி பெய்ததால் சாலைகள் மூடப்பட்டுவிட்டன.

ரயிலையும் இயக்க முடியாத சூழல். கீழிருந்து மேலே வருவதற்கோ, மேலிருந்து கீழே செல்வதற்கோ வழி இல்லை. சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். பலருக்கு இந்த அதீத பனியும் குளிரும் ஒத்துக்கொள்ளவில்லை. ஜெர்மாட் விடுதிகளில் மட்டும் 13 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருக்கிறார்கள். 5,500 மக்கள் வசிக்கிறார்கள்.

“வெளியில் செல்ல முடியாது, விளையாட முடியாது. ஆனால் அறைகளுக்குள் பத்திரமாக இருக்க முடியும். பனி குறைந்தவுடன் கிளம்ப வேண்டியதுதான்” என்று ஒரு பக்கம் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். “இந்த மோசமான பருவ நிலையை ரசிக்க முடியவில்லை. அதனால் ஹெலிகாப்டர் மூலம் கீழே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று மற்றொரு பக்கம் கிளம்புகிறார்கள். ‘

பயணிகளைச் சிறை வைத்த பனிப் பொழிவு!

கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒருவர், தன் வீட்டில் நுழைந்த பெரிய சிலந்தியைக் (வுல்ஃப் ஸ்பைடர்) கொல்வதற்காகத் தீ வைத்தார். நெருப்பிலிருந்து தப்பிக்க சிலந்தி, மெத்தை மீது ஓடியது. தீ வெகுவேகமாக அறை முழுவதும் பரவியது. “என் வீட்டு மேல் தளத்தில்தான் அந்த மனிதர் வசிக்கிறார். மிகப் பெரிய சிலந்திதான்.

அதற்காக கொஞ்சம் கூட யோசிக்காமல் நெருப்பு வைத்துவிட்டார். சிலந்தி சென்ற இடங்களுக்கெல்லாம் தீ பரவிவிட்டது. உடனே தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தோம். நல்லவேளை 20 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தார்கள். சுமார் 7 லட்சம் ரூபாய் அளவுக்கு சேதமாகிவிட்டது. யாருக்கும் காயமும் இல்லை” என்கிறார் பக்கத்து வீட்டில் வசிக்கும் லிண்ட்சே வைஸ்கார்வர். இந்த சிலந்தி விஷமற்றது, தனக்கு ஆபத்து என்றால் மட்டும் கடிக்கக்கூடியது. வட அமெரிக்காவில் சர்வ சாதாரணமாகப் பார்க்கக்கூடியது.

மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தலாமா!

வட கரோலினாவில் நீர்நிலைகள் எல்லாம் பனியால் உறைந்துவிட்டன. ஒரு பூங்கா குளத்தில் வசித்த அலிகேட்டர் முதலைகள் இறந்து போயிருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் அவை உயிருடன் இருக்கின்றன. தலையை மட்டும் தண்ணீருக்கு வெளியே நீட்டியபடி அப்படியே சிலைபோல் இருக்கின்றன. “கோடிக்கணக்கான ஆண்டுகளாக பூமியில் முதலைகள் வசித்து வருகின்றன. இவற்றில் இதுவரை பெரிய மாற்றம் நிகழவே இல்லை. எந்தக் கடுமையான சூழலையும் சமாளிக்கும் திறன் பெற்றவை. உடலை பனி சூழ்ந்துகொண்டவுடன் இயக்கத்தை நிறுத்தி, ஆழ்நிலை உறக்கத்துக்கு சென்றுவிடுகின்றன. தலையை மட்டும் வெளியே நீட்டி சுவாசித்துக் கொள்கின்றன. பனி உருகும் வரை இப்படியே இருந்து, உயிர் தப்பிவிடுகின்றன. குளம் முழுவதும் இவற்றின் தலைகளைப் பார்க்கலாம்” என்கிறார் பூங்கா மேலாளர் ஜார்ஜ் ஹவார்ட்.

உயிர் தப்பிக்கும் ரகசியம்!

SCROLL FOR NEXT