ஆஸ்திரேலியாவில் பிடிபட்ட இலங்கைத் தமிழர்களிடம் இந்திய தூதரக அதிகாரிகள் விரைவில் விசா ரணை நடத்த உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு இலங்கை அகதிகள் முகாம்களைச் சேர்ந்த 157 பேர் புதுச்சேரியில் இருந்து கடந்த ஏப்ரல் 13-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு படகில் புறப்பட்டனர். அவர்களின் படகு கிறிஸ்துமஸ் தீவுப் பகுதியில் ஜூன் 29-ம் தேதி தடுத்து நிறுத்தப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரிய அவர்களுக்கு தஞ்சம் அளிக்க அந்த நாட்டு அரசு மறுத்துவிட்டதால் சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக நடுக்கடலில் கப்பலில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அண்மையில் அவர்கள் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கர்டின் குடியேற்றவாசிகள் தடுப்பு மையத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசுடன் ஆஸ்திரேலிய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் இலங்கை அகதிகள் அனைவரையும் திரும்ப அழைத்துக் கொள்ள இந்தியா முன்வந்ததாகக் கூறப்படுகிறது.
இதன்படி கர்டின் தடுப்பு முகாமில் உள்ள இலங்கை அகதிகளை அடையா ளம் காண இந்தியத் தூதரக அதிகாரிகள் அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்த உள்ளதாக ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை அமைச்சர் ஸ்கார்ட் மோரிசன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்தியா மிகவும் பாதுகாப்
பான, மிகப்பெரிய ஜனநாயக நாடு. அங்கிருந்து சட்ட விரோதமாக வெளியேறியுள்ள அகதிகள் பொருளாதார முன்னேற்றத்தைக் கருதி ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளனர். அவர்கள் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள். இந்தியாவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக் கப்படும் என்று கூறப்படுவது தவறான தகவல். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கான இந்தியத் தூதர் பைரன் நந்தா கூறியபோது, ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் மக்கள் இந்தியாவில் இருந்து வந்தவர் களா என்பது குறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றார்.
தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 157 பேரில் எத்தனை பேர் இந்திய குடியுரிமைப் பெற்றவர்கள், இலங்கை அகதிகள் எத்தனை பேர் என்பது குறித்து விசாரித்து அறிந்த பின்னரே அவர்களை இந்தியாவுக்கு திரும்ப அழைத்துக் கொள்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.