உலகம்

வரிசையாக நிற்க வைத்து 15 பேர் சுட்டுக்கொலை: ஆப்கனில் தலிபான்கள் வெறிச்செயல்

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் 2 வாகனங்களில் சென்றவர்களை இடைமறித்து இறக்கி சாலையோரத்தில் வரிசையாக நிற்கவைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர் தலிபான் தீவிரவாதிகள். இந்த சம்பவம் கோர் மாகாணத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்தது.

11 ஆண்கள், 3 பெண்கள், ஒரு குழந்தை ஆகியோர் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள். ஒருவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார். மற்ற அனைவரையும் நெஞ்சுப் பகுதியிலும் தலையிலுமாக குறி வைத்து தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.

15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை கோர் மாகாண காவல்துறை தலைவர் உறுதி செய்தார். தலிபான் தீவிரவாதிகள்தான் இந்த கொடிய சம்பவத்துக்கு காரணமானவர்கள் என்றும் கூறினார். தலிபான்கள் இதுவரை இந்த சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்கவில்லை. பொதுமக்களை நாங்கள் எப்போதும் கொல்வது இல்லை என்றே அவர்கள் மறுப்பு தெரிவிப்பது வழக்கம்.

ஹெராத் நகரில் டாக்ஸி ஒன்றில் சென்ற பின்லாந்து நாட்டின் இரு சமூக சேவை ஊழியர்கள் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட அதே தினத்தில் மேலும் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது தவிர, தக்கார் மாகாணத்தில் உள்ள சந்தையில் ஈத் பண்டிகைக்காக பொருள் வாங்க பொதுமக்கள் திரண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 6 பே2ர் உயிரிழந்தனர். 20 பேருக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் நடக்கும் தாக்குதல் சம்பவங்களில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது அதிகரித்துள்ளதாக ஐநா தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்முறை சம்பவங்களும், தீவிரவாத தாக்குதலும் ஆப்கானிஸ்தானில் பெருகிவிட்டதாக சர்வதேச நெருக்கடி நேர உதவி குழு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான அஷ்ரப் கனி, அப்துல்லா அப்துல்லா இடையே ஏற்பட்டுள்ள நீயா நானா சண்டைதான் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

1992-1996ம் ஆண்டுகளில் நாட்டை சிதைத்த இனப் போர் சூழ்நிலைமை மீண்டும் வந்துவிடுமோ என்கிற அச்சம் நிலவுகிறது.

SCROLL FOR NEXT