உக்ரைன் வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் எம்.எச் 17 குறித்து தன்னிச்சையான விசாரணை நடத்த வேண்டும் என்ற ஐ. நா பாதுகாப்பு கவுன்சிலினின் தீர்மானத்திற்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது .
உக்ரைனில் மலேசிய விமானம் எம்.எச்.17, நொறுங்கி சாம்பலானதில் 282 பேர் பலியாகினர். இது தொடர்பாக சர்வதேச விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மலேசியா, நெதர்லாந்து, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்து சர்வதேச விசாரணைக் குழுவை அமைத்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச அளவில், சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் திங்கள் அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த தீர்மானத்திற்கு ரஷ்யா தனது முழு ஆதரவை அளிக்கும் என்று இன்று தெரிவித்துள்ளது.
சம்பவம் நடந்த இடம், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால், சம்பவ இடத்தை பாதுகாப்பதும் அந்த இடத்தில் எந்த ஒரு மாறுதலும் நடைபெறாமல் பார்த்துக்கொள்வதும் கடினமானதாகக் கருதப்பட்டது.
ஆனால், தற்போது உக்ரைனில் தாக்குதலில் ஈடுப்பட்டுவரும் குழுக்கள், விமானம் நொறுங்கிய இடத்தில் தாக்குதல் எதனையும் நடத்தக்கூடாது என்றும், ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் ஆய்வு மற்றும் இதர சர்வதேச அமைப்புகளின் விசாரணைக்கு அந்த பகுதி எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக மாஸ்கோவில் நடத்தப்பட்ட ரஷ்ய வெளியுறவுத்துறைத் தரப்பில் கூறப்பட்டதாக, ஜிங்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, உக்ரைனில் நொறுங்கிய விமானத்தின் தரவுகள் அடங்கிய கறுப்புப் பெட்டி, மலேசிய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. விமானத்தின் கறுப்புப் பெட்டி லேசான சேதத்துடனேயே காணப்படுவதாக மலேசிய சிறப்பு தூதர் தெரிவித்துள்ளார்.
சம்பவ பகுதியிலிருந்து மீட்கப்பட்ட 198 உடல்கள், குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகளில் ஏற்றப்பட்டு, அவை அனைத்தும் அடையாளம் காணப்படுவதற்காக நெதர்லாந்துக்கு அனுப்பப்பட உள்ளது.
கடந்த வியாழக்கிழமை, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கி பயணித்த போயிங் 777 ரக விமானம் எம்.எச்.17 உக்ரைனின் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள டோனெட்ஸ்க் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதில் விமான ஊழியர்கள் 15 பேர் உள்பட 298 பேர் பலியாகினர். 282 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, 16 உடல்களின் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.