உலகம்

இரண்டு பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

செய்திப்பிரிவு

காசா: மேலும், இரண்டு பிணைக் கைதிகளை விடுவித்துள்ளது ஹமாஸ் அமைப்பு. இது குறித்த அறிவிப்பை இஸ்ரேல் தரப்பு இன்னும் உறுதி செய்யவில்லை.

கடந்த 7-ம் தேதி ஏராளமான இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினரை ஹமாஸ் தீவிரவாதிகள் சிறைபிடித்து சென்றனர். இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலை தொடர்ந்து அவர்கள் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரால் சிறை வைக்கப்பட்டுள்ளனர். பிணைக் கைதிகளில் சிலர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான பேரை இஸ்ரேல் மீட்டது. இந்த நிலையில் மேலும் இரண்டு பிணைக் கைதிகளை விடுவித்து உள்ளது ஹமாஸ். இதனை செஞ்சிலுவை சங்கம் உறுதி செய்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று இரண்டு அமெரிக்க பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்து இருந்தது.

மனிதாபிமான அடிப்படையில் வயது முதிர்ந்த இரண்டு இஸ்ரேலியர்களை ஹமாஸ் தற்போது விடுவித்துள்ளது. “உடல்நிலை சார்ந்த காரணங்களுக்காக வயது முதிர்ந்த இருவரை விடுவித்துள்ளோம்” என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

நூரிட் கூப்பர் (79), யோச்செவ்ட் லிஃப்ஷிட்ஸ் (85) என இரண்டு பெண்களை ஹமாஸ் விடுவித்துள்ளது. அவர்கள் வீட்டில் இருந்தபோது ஹமாஸ் சிறை பிடித்தது. அவர்களது கணவர்களும் பிணைக் கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் இன்னும் ஹமாஸ் வசம் உள்ளனர். சுமார் 220-க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் ஹமாஸ் வசம் தற்போது இருப்பதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT