உலகம்

உலக மசாலா: விளையாட்டு நல் வினையாகிவிட்டது!

செய்திப்பிரிவு

நைஜீரியாவில் வசிக்கும் சோபி இஜியோமா, ஒப்பனைக் கலைஞர். ஃபேஸ்புக்கில் வந்த திருமண விளம்பரத்தைப் பார்த்தார். தோழிகளுடன் சேர்ந்து கிண்டல் செய்தார். ஜாலிக்காக ‘எனக்கு விருப்பம் இருக்கிறது’ என்று ஒரு பின்னூட்டமும் இட்டார். அடுத்த ஏழே நாட்களில் விளம்பரம் செய்த மனிதரையே திருமணம் செய்துகொண்டார்!

சிடிம்மா அமெடு அறைகலன்கள் உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். திருமணம் செய்துகொள்ள அவர் முடிவெடுத்தபோது, நண்பர்கள் ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்து, பெண் தேடச் சொன்னார்கள். “நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். சுயமாகத் தொழில் செய்து வருகிறேன். எல்லோரையும் மதிக்கத் தெரிந்தவன் என்பதால் என் இணையையும் மதிப்பேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால், என் மீது நம்பிக்கை இருந்தால் பதிலளியுங்கள். டிசம்பர் 31, 2017 நள்ளிரவு 12 மணி வரையே இந்த வாய்ப்புக் காத்திருக்கும். விருப்பமுள்ளவர்களில் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரே வாரத்தில் அதாவது ஜனவரி 6, 2018 அன்று திருமணம் நடைபெறும். வாழ்த்துகள்” என்று விளம்பரம் செய்திருந்தார்.

அமெடுவைத் திருமணம் செய்துகொள்ள ஒரு சிலரே ஆர்வம் தெரிவித்திருந்தனர். என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் சோபியின் பின்னூட்டம் வந்துசேர்ந்தது. உடனே தனிப்பட்ட முறையில் ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் உரையாட ஆரம்பித்தார்.

“நான் சும்மா ஜாலிக்காகத்தான் விருப்பம் இருக்கிறது என்று பதிலளித்தேன். சாட்டில் அவர் வந்தபோது மரியாதை நிமித்தமாகப் பதிலளிக்க ஆரம்பித்தேன். சில மணி நேரங்களில் இருவரும் நண்பர்களைப் போல உரையாட ஆரம்பித்துவிட்டோம். இரண்டாவது நாள், 500 கி.மீ. தூரத்திலிருந்து என்னைப் பார்க்க வந்துவிட்டார். உணவகத்தில் முதல் சந்திப்பு. இருவருக்கும் ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் மிகவும் பிடித்துவிட்டது. யாரோ ஒரு மனிதரைப் பார்த்தவுடன் பிடித்துப் போகும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. அவரும் என்னை மனதளவில் மனைவியாகவே ஏற்றுக்கொண்டது போல் பேசினார். பிறகு அவருடைய உறவினர் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றார். இருவரும் சென்றோம். அங்கே உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. அவர்களை அழைத்துக்கொண்டு அன்றே எங்கள் வீட்டுக்கு வந்து, பெண் கேட்டார். என் அண்ணனுக்கு அமெடுவைப் பிடித்துவிட்டது. அப்பா இல்லாத எனக்கு, ஒரு நல்ல மனிதர் கணவராகக் கிடைத்துவிட்டார் என்று மகிழ்ந்தார். உடனே அக்கம் பக்கத்தினரை அழைத்து, நிச்சயதார்த்தம் நடந்தது. நைஜீரியாவில் sickle cell anemia என்ற ரத்தக் குறைபாடு நோய் அதிகமாக இருப்பதால், நாங்கள் இருவரும் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டோம். ஜனவரி 6 அன்று எங்கள் திருமணம் பாரம்பரிய முறைப்படி அழகாக நடந்து முடிந்தது. சேர்ந்து வாழ ஆரம்பித்த சில நாட்களில் அமெடு எவ்வளவு அருமையான மனிதர் என்பதைப் புரிந்து கொண்டேன்” என்கிறார் சோபி.

விளையாட்டு நல் வினையாகிவிட்டது!

SCROLL FOR NEXT