உலகம்

உக்ரைன் விவகாரம்: அமெரிக்க மிரட்டலுக்கு பணியமாட்டோம் - ரஷ்யா

செய்திப்பிரிவு

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா விடுக்கும் மிரட்டல்களுக்கு பணியமாட்டோம் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

உக்ரைன் பிரிவினைவாதிகளுக்கு ஊக்கம் தரும் ரஷ்யாவின் நடவடிக்கைகளை ஆட்சேபித்து ரஷ்ய எரிசக்தி நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் ஓஏ நோவாடெக் ஆகியவை மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இதுபற்றி ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘மிரட்டல்களை ரஷ்யா சகித்துக் கொள்ளாது. அதற்கு பதிலடி தரும் உரிமை எங்களுக்கு இருக்கிறது’ என தெரிவித்துள்ளது. வங்கி போன்ற நிதிச்சேவைகள், எரிசக்தி, ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீதும், உக்ரைன் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அமைப்புகள் மீதும் அமெரிக்க நிதித்துறை பல்வேறு தடைகளை விதித்தது.

இதனிடையே, உக்ரைனில் கிளர்ச்சியை ரஷ்யா தொடர்ந்து தூண்டிவருவதால் அந்நாட்டின் பெரிய நிறுவனங்கள் மீது தடை விதிக்க அனுமதி வழங்கியதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார். சர்வதேச அளவிலான சமரச பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா முன்வந்து உக்ரைன் எல்லையில் கண்காணிப்பாளர்களை நியமிக்க ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நிருபர்களிடம் அதிபர் ஒபாமா புதன்கிழமை கூறினார்.

ரஷ்ய அதிபர் எச்சரிக்கை

அமெரிக்காவின் நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள தற்போதைய திருப்பம் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். இந்த தடை, எய்தவர் மீதே பாயப் போகிறது. அமெரிக்காவின் நடவடிக்கை அதன் தேசிய நலனுக்கு குந்தகம் ஏற்படுத்தும் என்று எச்சரித்தார் புதின்.

“அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பின் தடை நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல, மிகமிக மோசமானது. இதற்கு தகுந்த வகையில் நடவடிக்கை எடுப்போம். பொய் சாக்கு சொல்லி ரஷ்யா நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரஷ்ய எடுக்கும் நடவடிக்கை அமெரிக்காவுக்கு வேதனை தருவதாக இருக்கப்போகிறது” என ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் ரியாப்காவ் இன்டர்பேக்ஸ் செய்தி ஏஜென்ஸிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

SCROLL FOR NEXT