கோப்புப்படம் 
உலகம்

காசாவில் உள்ள 2-வது பெரிய மருத்துவமனை மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் ஆயத்தம்!

செய்திப்பிரிவு

டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் காசா நகரில் அமைந்துள்ள இரண்டாவது பெரிய மருத்துவமனையான அல்-குவாத் மருத்துவமனை மீது விரைவில் தாக்குதல் நடத்த உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஏற்கெனவே காசாவில் உள்ள அல்-ஆஹ்லி மருத்துவமனை மீது ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதில், மருத்துவமனையில் இருந்த சுமார் 500 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இந்த அறிவிப்பை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை காசா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் காசாவில் உள்ள பழமையான தேவாலய வளாகத்தில் பலர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்தது.

இத்தகைய சூழலில் அல்-குவாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், அப்பகுதியில் வசித்து வரும் பொது மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது இஸ்ரேல் பாதுகாப்பு படை. இந்த மருத்துவமனை மீது விரைவில் தாக்குதல் நடத்த உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மருத்துவமனை, பள்ளி மற்றும் மசூதி போன்ற இடங்களில் பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ள காரணத்தால் இஸ்ரேல் ராணுவம் இந்த இடங்களை நோக்கி தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT