ஆப்கானிஸ்தான் தலைநகரம் காபூலிலுள்ள ராணுவ அகாடமி மீது துப்பாக்கி ஏந்திய தீவிரவாதி ஒருவர் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டுப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆப்கான் அதிகாரிகள் தரப்பில், "காபூலிலுள்ள ராணுவ அகாடமி மீது இன்று (திங்கட்கிழமை) அதிகாலை தூப்பாக்கி ஏந்திய தீவிரவாதி ஒருவர் தாக்குதல் நடத்தினார். எனினும் தீவிரவாதியின் தாக்குதலுக்கு பாதுகாப்பு பாடையினர் தக்க பதிலடி கொடுத்ததால், தீவிரவாதியால் அகாடமியின் உள்ளே நுழைய முடியவில்லை. இதனால் அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. தற்போது அமைதி நிலவுகிறது" என்றார்.
அதிகாலை 5 மணியளவில் ராணுவ அகாடமியில், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
முன்னதாக ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர், வெடிகுண்டு நிரப்பிய ஆம்புலன்ஸ் வாகனத்தை மோதி தாக்குதல் நடத்தியதில் 95 பேர் உடல் சிதறி பலியாயினர். மேலும் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு தாலிபன்கள் பொறுப்பேற்றுக் கொண்டது.