உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா, விமான எதிர்ப்பு ஏவுகணைகளை சப்ளை செய்து வருகிறது. இந்த ஏவுகணை மூலம் மலேசிய விமானம் அண்மையில் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமைச் செயலகமான பென்டகன் கூறியுள்ளது.
இதுகுறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறும்போது, “உக்ரைன் எல்லைப் பகுதியில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இடம்பெயர்வது தொடர்ந்து காணப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான இவை, அண்மையில் மலேசிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட ஏவு கணைக்கு இணையான திறன் கொண்டவை. பிரிவினைவாதிகளுக்கு உதவு வதை ரஷ்யா நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ரஷ்ய ராணுவ வீரர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் உக்ரைன் எல்லையில் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பலவகை ஆயுதங்களை கையாளும் திறன் கொண்டவர்கள். திறன் வாய்ந்த இப்படைப் பிரிவு தாக்குதலுக்கு எந்நேரமும் தயாராக உள்ளது” என்றார்.