உலகம்

இஸ்ரேல் - லெபனான் எல்லைப் பகுதியில் புகை மூட்டம்!

செய்திப்பிரிவு

டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளின் எல்லைப் பகுதியில் புகை மூட்டம் மூண்டுள்ளது. இது தொடர்பாக காணொளி காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இதில் சில இடங்களில் தீ பிடித்து எரிவது போலவும் உள்ளது.

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை தொடங்கி உள்ளது. இஸ்ரேலின் வடக்கு எல்லைப் பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஏவுகணை குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டனர். இதனை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்திருந்தது. இந்த தாக்குதல் தொடர்ந்தால் லெபனானை அழிப்போம் என அண்மையில் இஸ்ரேல் ராணுவம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இரு தரப்பிலும் மோதல் தீவிரமடைந்துள்ளது.

இத்தகைய சூழலில் இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளின் எல்லைப் பகுதியில் புகை மூட்டம் மூண்டுள்ளது. இந்த காட்சியை சர்வதேச செய்திகளை வெளியிட்டு வரும் செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ளது. இது ஏவுகணை தாக்குதல் அல்லது குண்டு வீச்சால் நிகழந்துள்ளதா என்ற விவரம் வெளியாகவில்லை. பாலஸ்தீனத்தின் காசா நகரில் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது. இதனை திட்டவட்டமாக இஸ்ரேல் மறுத்துள்ளது.

இத்தகைய சூழலில் இஸ்ரேல் - லெபனான் எல்லைப் பகுதியில் நிலவும் சூழல் சண்டையின் தீவிரத்தை உச்சம் அடைய செய்துள்ளது.

SCROLL FOR NEXT