பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெனாசிர் பூட்டோ மரணத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்காத முஷாரப்பே காரணம் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ குற்றச்சாட்டியுள்ளார்.
பெனாசிர் பூட்டோவின் பத்தாம் ஆண்டு நினைவு நாள் தினத்தையொட்டி இஸ்லமாபாத்தில் நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னணியில் பெனாசிர் பூட்டோவின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிலாவல் பூட்டோ கூறும்போது, முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் கொல்லப்பட்டதற்கு முக்கிய காரணம் அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்காத அப்போது அதிபராக இருந்த முஷாரப்தான். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து பாதுகாப்பு வழங்க முஷரப் தவறிவிட்டார் என்றார்.
கடந்த 2007-ல் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ தேர்தல் பிரச்சாரத்தின்போது கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய இரு போலீஸ் அதிகாரிகளுக்கு 17 வருடம் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் எனக் கூறி பாகிஸ்தானை விட்டு வெளியேறிய முஷாரப் கடந்த ஆண்டு முதல் துபாயில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் முஷாரப்பை தேடப்படும் குற்றவாளியாக பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.