பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள வடக்கு வசிரி்ஸ்தான் பகுதியில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் தரைவழி தாக்குதலை திங்கள்கிழமை தொடங்கியது. இதுதொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அசிம் சலீம் பஜ்வா கூறியதாவது:
மிரான்ஷா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதையடுத்து, அப்பகுதியில் திங்கள்கிழமை காலையில் தரைவழி தாக்குதல் தொடங்கியது. மிரான்ஷா நகரில் ராணுவ வீரர்களும் சிறப்பு அதிரடிப் படையினரும் ஒவ்வொரு வீடாக நுழைந்து சோதனை நடத்தி வருகின்றனர். தரைவழி தாக்குதல் மூலம் இதுவரை 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் சுரங்கப்பாதை இருப்பதையும் ஐ.இ.டி. வகை வெடிமருந்துகளை தயாரிக்கும் தொழிற்சாலை இருப்பதையும் வீரர்கள் கண்டறிந்துள்ளனர். தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் 3 வீரர்கள் காயமடைந்தனர்.
மிராலி மற்றும் இதர பகுதிகளில் பதுங்கி உள்ள தீவிரவாதிகளை நோக்கி ராணுவ டாங்கிகள், இதர கனரக ஆயுதங்கள் நகர்ந்து வருகின்றன. தீவிரவாதிகள் பதுங்கி உள்ள மற்ற பகுதிகளையும் வீரர்கள் சுற்றிவளைத்துள்ளனர். தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக ஜூன் மாதம் 15-ம் தேதி தொடங்கப்பட்ட தாக்குதலில் இதுவரை 376 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 19 பேர் சரணடைந்துள்ளனர். கடந்த 15 நாட்களில் தீவிரவாதிகளின் 61 மறைவிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
தீவிரவாதிகளுக்கு எதிரான இந்தத் தாக்குதலில் 17 வீரர்களும் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் இப்பகுதியிலிருந்து வெளியேறி முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் கராச்சி விமான நிலையத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி உள்ள வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.