பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோஸி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தனக்கு எதிராக நடைபெறும் வழக்கின் விசாரணையை திசை திருப்பும் வகையில் செயல்பட்டது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2007-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கான நிதியை லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி மம்மார் கடாஃபியிடம் இருந்து சட்ட விரோதமாக நிகோலஸ் சர்கோஸி பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகோலஸ் சர்கோஸிக்கு எதிரான வழக்கு தொடர்பான தகவல் களைத் திரட்டும் பணியில் அவரின் வழக்கறிஞர் தியேரி ஹெர்ஜாக்கும் இரண்டு நீதிபதிகளும் ஈடுபட்டனர். இந்த மூவரையும் தடுப்புக் காவலில் வைத்து போலீஸார் விசாரிக் கின்றனர். தொடர் நடவடிக்கையாக சர்கோஸியையும் போலீஸார் காவலில்வைத்து விசாரித்து வருகின்றனர். தேவைப்பட்டால் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று கூடுதலாக ஒரு நாள் விசாரிக்கவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
பிரான்ஸ் வரலாற்றில் முன்னாள் அதிபர் ஒருவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. சர்கோஸிக்கு எதிரான இந்த விசாரணை, 2017-ம் ஆண்டு மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்த அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.