வித்தியாசமான புகைப்படங்கள் எப்போதுமே புகைப்படக் கலைஞரை புகழின் உச்சிக்கு கொண்டு சேர்ந்துவிடும். ஆனால், அப்படியே தலைகீழாக ஒரு சம்பவம் நடந்தது. ஒரு புகைப்படம் அந்த புகைப்படக்காரரைவிட புகைப்படத்தில் இருந்தவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
புகழின் உச்சிக்கு சென்றவர் வேறு யாருமில்லை ஒரு குரங்கு. செல்ஃபியில் அழகாக புன்னகை பூத்திருந்த கருங்குரங்கு. கடந்த 2011ம் ஆம் ஆண்டு இந்தோனேசிய ஜாவா காடுகளில் டேவிட் ஸ்லேட்டரின் கேமராவால் பதிவாகியிருந்த கருங்குரங்கு ஒன்றின் செல்ஃபி புகைப்படமே அது.
ஸ்லேட்டர் வைத்திருந்த தானியங்கி கேமராவை நரூட்டோ தற்செயலாக இயக்க அதில் அதன் சிரித்த முகம் பதிவானது. டேவிட் ஸ்லேட்டர் கேமராவில் பதிந்த அந்த செல்ஃபி புகைப்படம் 5 கோடிக்கும் அதிகமானோரால் பகிரப்பட்டது. பின்னாளில் இந்த புகைப்படம் சார்ந்த காப்புரிமை பிரச்சினைகள் சில எழுந்து ஓய்ந்தன.
தற்போது அந்த செல்ஃபி குரங்கு மீண்டும் பிரபலமாகியிருக்கிறது. காரணம், பீட்டா எனும் விலங்குகள் நல அமைப்பின் இந்த ஆண்டுக்கான (2017-க்கான) சிறந்த நபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதே
இது குறித்து பீட்டா அமைப்பு வெளியிட்டுள்ள விளக்கத்தில், நரூட்டோ என்ற அந்த கருங்குரங்கை நாங்கள் கவுரவித்திருக்கிறோம். அதன் வெகுளித்தனமான சிரிப்பு, நரூட்டோ ஏதோ 'ஒன்றல்ல' யாரோ 'ஒருவர்' என உணரவைத்தது. அதற்காகவே நரூட்டோவை இந்த ஆண்டுக்கான பீட்டாவின் சிறந்த நபராக தேர்ந்தெடுத்துள்ளோம், எனத் தெரிவித்துள்ளது.