கிழக்கு உக்ரைன் பகுதியில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்து, உக்ரைன் வான்வெளியை பெரும்பாலான சர்வதேச விமானங்கள் தவிர்த்து வருகின்றன.
உக்ரைனில் போர் நடைபெற்று வந்த போதும் அந்த வான்வெளியில் பறக்கத் தடைவிதிக்கப்படவில்லை. மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால் அதிர்ச்சியடைந்த சர்வதேச விமான நிறுவனங்கள் உக்ரைன் வான்வெளியைப் பயன்படுத்தாமல் வேறு வழியில் விமானங்களை இயக்கி வருகின்றன.
விமானப் போக்குவரத்து தொடர்பான தகவல்களை அளிக்கும் பிளைட்ரேடார்24.காம் என்ற இணையதளத்தின் மூலம், நடப்பு விமானப் போக்குவரத்து நிலையை அறிய முடியும். அதன்படி, அந்த இணையதளத்தின் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், உக்ரைன் வான்வெளியை ஓரிரு விமானங்கள் மட்டுமே பயன்படுத்துகின்றன.
அவையும் உள்நாட்டு விமானங்களாகவோ அல்லது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து வருபவையாகவோ அல்லது மாஸ்கோவுக்குச் செல்பவையாகவோ மட்டும் உள்ளன. மற்ற விமானங்கள் ஹங்கேரி, ரோமானியா, செர்பியா, போஸ்னியா, ஸ்லோவேகியா, ஆஸ்திரியா, பல்கேரியா, செக் குடியரசு, அல்பேனியா, போலந்து, லிதுவேனியா, பெலாரஸ் ஆகிய நாடுகளின் வான்வெளியை அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.