உலகம்

சவக்குழியில் இருந்து மீட்கப்பட்ட போஸ்னியர்கள் உடல் அடக்கம்

செய்திப்பிரிவு

வடமேற்கு போஸ்னியாவில் சவக்குழியில் இருந்து எடுக்கப்பட்ட போஸ்னியர்களின் உடல்கள் திங்கள்கிழமை அடக்கம் செய்யப்பட்டன.

1990-களில் யுகோஸ்லாவியா உடைந்தபோது, போஸ்னியா மற்றும் குரோஷியாவின் சில பகுதிகளை உள்ளடக்கி செர்பியர்கள் தனி நாடு உருவாக்க முயன்றனர். இதையொட்டி தங்கள் பகுதியில் இருக்கும் செர்யியர்கள் அல்லாதவர்களை அவர்கள் விரட்டியடித்தனர்.

ஏராளமானோர் கொலை செய்யப்பட்டனர். கொலை செய்யப்பட்ட உடல்களை மறைக்க, மிகப்பெரிய குழிகளை தோண்டி உடல்களை ஒட்டுமொத்தமாக புதைத்தனர். இதனால் சுமார் 10 ஆயிரம் போஸ்னியர்களை அப்போது காணவில்லை.

இந்நிலையில் வடமேற்கு போஸ்னியாவின் டொமாசிகா என்ற கிராமத்தில் சவக்குழி ஒன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சுமார் 400 உடல்கள் இருந்தன. டி.என்.ஏ. பரிசோதனை மூலம் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்தது. இதில் இவர்கள் 1992-ல் பிரிஜிடோர் என்ற கிராமத்தில் கொல்லப்பட்டவர்கள் எனத் தெரியவந்தது.

283 முஸ்லிம்கள், ரோமன் கத்தோலிக் குரோஷியர் ஒருவர் என 284 பேரின் உடல்கள் திங்கள்கிழமை அடக்கம் செய்யப்பட்டன. முன்னதாக அப்பகுதியில் உள்ள விளையாட்டுத் திடலில் வைக்கப்பட்டிருந்த சவப் பெட்டிகளுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.

SCROLL FOR NEXT