உலகம்

ஜப்பானின் ஒகினாவா தீவை தாக்கியது ‘நியோகுரி’ சூறாவளி: க்யுஷூ தீவை இன்று தாக்கும்

செய்திப்பிரிவு

ஜப்பானின் ஒகினாவா தீவை கடுமையாக தாக்கி 2 பேரை பலி வாங்கிய நியோகுரி சூறாவளி, புதன்கிழமை நிலப்பகுதியை அடைந்தது. இது மேலும் நகர்ந்து க்யுஷு தீவை இன்று தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூறாவளி ஒகினாவா தீவை செவ்வாய்க்கிழமை தாக்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் வசித்த சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். கனமழையுடன் சூறைக்காற்று வீசியதால் சில இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. வீடுகள் இடிந்தன. ஒரு உணவகமும் இடிந்தது. தலைநகர் நஹாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த சூறாவளி தீவைக் கடந்து ஜப்பானின் நிலப்பகுதியை அடைந்துவிட்ட போதிலும், தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கனமழை காரணமாக, 62 வயதுடைய ஒருவர் தனது படகு மோதியதில் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் 81 வயதுடைய மீனவர் ஒருவர் இறந்ததாக அரசு ஊடகம் என்எச்கே தெரிவித்துள்ளது. மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். மழை காரணமாக ஒகினாவா தீவில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. விமானம் மற்றும் கடல்வழி போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நியோகுரி சூறாவளி புதன்கிழமை காலை நிலவரப்படி கியுஷு தீவின் தென்மேற்குக் கடற்கரையிலிருந்து 500 கி.மீ. தொலைவில் (நிலப்பகுதியில்) மையம் கொண்டிருந்தது. டோக்கியோ, ஒசாகா உள்ளிட்ட நகரங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய ஹோன்ஷு தீவுக்கு அருகில்தான் க்யுஷு தீவு அமைந்துள்ளது. அங்கு ஏற்கெனவே கனமழை பெய்து வருகிறது. காற்றும் பலமாக வீசி வருகிறது.

இந்த சூறாவளி காரணமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசி வருகிறது. இது மேலும் நகர்ந்து க்யுஷு தீவை வியாழக்கிழமை தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அடைமழை பெய்வதுடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்படும் என்றும் அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.

SCROLL FOR NEXT