உலகம்

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் சீனாவில் சுற்றுப்பயணம்

செய்திப்பிரிவு

சீனப் பிரதமர் லீ கெஹியாங்கை, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.

உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் அடங்கிய குழுவுடன் சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள் ளார். திங்கள்கிழமை காலை சீனப் பிரதமர் லீகெஹியாங்கை சந்தித்து இரு நாடுகளின் உறவை மேம்படுத்துவது குறித்து ஜெர்மனி பிரதமர் பேசினார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவு சீனாவின் செங்டு சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சீனாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள செங்டு மாநகரின் வளர்ச்சியைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். சீனாவின் கடற்கரையோர நகரங்கள் மட்டுமல்ல, செங்டு உள்ளிட்ட மேற்குப் பகுதி நகரங்களும் வளர்ச்சியடைந்துள்ளன.

வர்த்தக உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து சீனப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தவுள்ளோம்” என்றார்.

மெர்கல், பிரதமர் பொறுப்புக்கு வந்த பின்பு 7-வது முறையாக தற்போது சீனா வந்துள்ளார். அவரின் பதவிக் காலத்தின்போது இருநாடுகளின் நட்புறவு மிகவும் சிறப்பான நிலையை எட்டியுள்ள தாக சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஜின்குவா தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் சீனாவின் சிறந்த கூட்டாளியாக ஜெர்மனி உள்ளது. அதேபோல, ஆசியாவில் ஜெர்மனியின் சிறந்த கூட்டாளியாக சீனா உள்ளது என்றும் அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இரு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் சந்திப்புக் கூட்டத் துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது, இரு நாடுகளின் வர்த்தக ஒத்துழைப்பு தொடர்பாக மட்டுமின்றி, ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கை தொடர்பாகவும், உக்ரைனில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் தொடர்பாகவும் சீனாவுடன் ஜெர்மனி ஆலோசனை நடத்தவுள்ளது.

SCROLL FOR NEXT