பிலிப்பின்ஸில் அபு சய்யப் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி கள் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 18 கிராம மக்கள் கொல்லப் பட்டனர்.
இதுகுறித்து அந்நாட்டு ராணுவ அதிகாரி ஜெனரல் மார்ட்டின் பின்டோ கூறியதாவது: முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கும் மிகவும் பின்தங்கிய மாகாணம் சுலு. இந்த மாகாணத்தில் தலிபாவ் நகருக்கு அருகே உள்ள ஒரு கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த சிலர், ரமலான் பண்டிகையை முன்னிட்டு, திங்கள்கிழமை 2 வேன்களில் தங்களது உறவினரின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த சய்யப் அமைப்பைச் சேர்ந்த சுமார் 40 முதல் 50 தீவிரவாதிகள் வேனில் சென்றவர்களை துப்பாக்கியால் சுட்டனர். இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் காயமடைந்த 13 பேரில் 2 குழந்தைகள் மருத்தவமனையில் இறந்தனர் என்றார்.
கடந்த 1990-களில் 300 போராளிகளுடன் அபு சய்யப் அமைப்பு நிறுவப்பட்டது. இந்த அமைப்பினர் ஆள் கடத்தல், வெடிகுண்டு தாக்குதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சுலு மாகாணத்தில் உள்ள வனப் பகுதியில் முகாமிட்டுள்ள இவர்களை ஒடுக்குவதற்கான செயலில் அமெரிக்க உதவியுடன் பிலிப்பின்ஸ் ராணுவம் ஈடுபட்டுள்ளது.