சிரியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 23 பேர் பலியாகினர்.
இதுகுறித்து சிரியாவை உன்னிப்பாகக் கண்காணித்து வரும் இங்கிலாந்தைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு கூறும்போது, சிரியாவில் ஐஎஸ் கட்டுப்பாட்டிலுள்ள டையர் இஸ்ஸார் நகரத்தில் அமெரிக்க ராணுவம் புதன்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் 23 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 6 பேர் பெண்கள், 8 பேர் குழந்தைகள்"என்றனர்.
இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க ராணுவம் தரப்பில், "நாங்கள் இலக்கை சரியாக குறிவைப்பத்துடன் தீவிரவாதிகள் அல்லாதவர்களை பாதுகாக்க அதிக கவனம் எடுத்து கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
சிரியாவில் ஐஎஸ் இயக்கத்தை அழிக்கும் பொருட்டு அமெரிக்க ராணுவம் தொடர்ந்து வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது.
இதில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா. உட்பட உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்த நிலையிலும் அமெரிக்கா அங்கு தொடர்ந்து வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது.