வகுப்பு மோதல்களை தூண்டிவிட அவ்வப்போது முயற்சிகள் நடந்தாலும்அதையும் தாண்டி எல்லா மதத்தவரும் அமைதியுடன் இணக்கமாக சேர்ந்து வாழும் நாடாக இலங்கை திகழ்கிறது என்றார் அதிபர் மகிந்த ராஜபக்சே.கொழும்பில் பௌத்த மதத்தினர் திரளாக பங்கேற்ற நிகழ்ச்சியில் அதிபர் பேசியதாவது:
எல்லா மதத்தினரும் சேர்ந்து வாழும் நாடாக திகழ்கிறது இலங்கை. பௌத்த மத நம்பிக்கைகளை சிதறடிக்கும் நோக்கில் அவ்வப்போது சில குழுக்கள் சமூகத்தில் பாகுபாடுகளை தோற்றுவிக்கின்றன.
அண்மையில் நடந்த சம்பவத்தில் முஸ்லிம்களின் உடைமைகள் தீக்கிரையாக்கப்பட்டன. பௌத்த மதத்தினர் மீதான நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி நடக்கிறது. பிற மதத்தினரை பாகுபாடு காட்டி நடத்துவதால் யாருக்கும் பயன் கிடைக்கப் போவதில்லை.
வகுப்பு வெறித் தீ மூண்டு இந்த நாடு சீரழியவேண்டும் என சில சக்திகள் விரும்புகின்றன. இவ்வாறு அதிபர் ராஜபக்சே பேசினார்.
தீவிரவாத அமைப்பான பொது பல சேனா குழுவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியான புத்த பிட்சு ஞானசாரரிடம் போலீஸார் விசாரணை நடத்திய நிலையில் அதிபரின் இந்த பேச்சு அமைந்துள்ளது.
தென்மேற்கு கடலோர நகரான ஆளுத்கமாவில் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாக ஞானசாரரிடம் புதன்கிழமை சுமார் 5 மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.ஆளுத்கம நகரில் கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறையை ஞானசாரர் தலைமையிலான பொது பல சேனா அமைப்பு தூண்டிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் காயம் அடைந்தனர். வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகளும் முஸ்லிம் அமைப்புகளும் குற்றம்சாட்டியுள்ளன.
முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் பொது பல சேனா அமைப்புக்கு அரசின் ஆதரவு உள்ளது என கூறப்படுவதை இலங்கை திட்டவட்டமாக மறுத்துள்ளது.