கடந்த 2008-ம் ஆண்டு மனைவி மற்றும் 2 குழந்தைகளைக் கொலை செய்த வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கணினி விஞ்ஞானி லட்சுமிநிவாசா நெருசு-க்கு அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஓக்லாந்து நீதிமன்ற நீதிபதி நான்சி கிரான்ட் தனது தீர்ப்பில் கூறும்போது, “நெருசு முற்றிலும் சுயநலமுடன் இருந்துள்ளார். இதனால் அவர் மனதளவில் பாதிக்கப் பட்டது மட்டுமல்லாமல், கொடூரகுணம் கொண்டவராகவும் மாறியுள்ளார். நான் இதுவரை நூற்றுக்கணக்கான வழக்குகளை விசாரித்துள்ளேன். ஆனால், இந்த வழக்கு தான் என்னை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது” என்றார்.
லட்சுமிநிவாசா நெருசு தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வந்தார். கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி, இவர் தனது மனைவி ஜெயலட்சுமியை (37) காய்கறி நறுக்கும் கத்தியால் 59 முறை குத்திய பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
பின்னர் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய தனது மகள் தேஜஸ்வி (14), மகன் சிவகுமார் (12) ஆகிய 2 பேரையும் கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் நடந்த அடுத்த நாளே ஹைதராபாத்துக்கு தப்பிச் சென்றார். எனினும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட நெருசு, வழக்கை சந்திப்பதற்காக அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
வழக்கு விசாரணையின்போது, குற்றத்தை ஒப்புக் கொண்ட அவர், அதுதொடர்பான விவரங்களை தன்னால் நினைவுகூரமுடிய வில்லை என தெரிவித்தார். நெருசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் லாரன்ஸ் கலுஸ்னி, சம்பவ நாளில் நெருசு மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாலேயே கொலை செய்ததாகக் கூறினார். ஆனால் நீதிபதிகள் அதை ஏற்கவில்லை.