உலகம்

ஹபீஸ் சயீதை கைது செய்ய பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

முபாஷிர் சைதி

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு வரும் பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீதை கைது செய்து அவர் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யுமாறு அமெரிக்கா, பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ளது.

இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “லஷ்கர் தலைவர் ஹபீச் சயீத் வீட்டுக்காவலிலிருந்து விடுவிக்கப்பட்டது குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலையடைந்துள்ளது. லஷ்கர் அமைப்பு நன்கு அறியப்பட்ட அயல்நாட்டு தீவிரவாத அமைப்பு, இதன் தாக்குதல்களால் அப்பாவி குடிமக்கள் பலியாகியிருக்கின்றனர், அமெரிக்கர்கள் உட்பட. ஆகவே இவரைக் கைது செய்து இவரது குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டும் என்பதை பாகிஸ்தான் உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளது.

மேலும் ஹபீஸ் சயீதை நாங்கள் உலக அளவிலான பயங்கரவாதி என்றும் ஐநா இவரை தனிப்பட்ட முறையில் பயங்கரவாதி என்றும் அறிவித்துள்ளோம். சயீத் தலைக்கு 10மில். டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தியுள்ளது அமெரிக்க தூதரகம்.

லாகூர் நீதிமன்றத்தின் சிறப்பு சீராய்வு வாரியம் ஹபீஸ் சயீது மீது பல முறை புகார் அளிக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தியும் கடைசி வரை புகார் பதிவு செய்யப்படாததால் அவரது வீட்டுக்காவல் முடிவுக்கு வந்ததோடு அவரை விடுவிக்குமாறு உத்தரவிட நேரிட்டது.

இதனையடுத்து ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில்தான் அமெரிக்கா அவரை மீண்டும் கைது செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT