உலகம்

ஜப்பானில் 20 வினாடிகளுக்கு முன்னதாகவே புறப்பட்ட ரயில்; மன்னிப்பு கோரிய ரயில்வே நிர்வாகம்

பிடிஐ

ஜப்பான் நாட்டில் ரயில் ஒன்று வழக்கமாக புறப்பட வேண்டிய நேரத்தில் இருந்து 20 வினாடிகளுக்கு முன்னதாகவே புறப்பட்டுச் சென்றதைத் தொடர்ந்து அந்த ரயிலை இயக்கும் ரயில்வே நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.

ஜப்பான் நாடு நேரம் தவறாமைக்கும், அந்நாட்டு மக்கள் பணிவுக்கும் பெயர் பெற்றவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், குறிப்பிட்ட நேரத்திலிருந்து வெறும் 20 வினாடிகளுக்கு முன்னதாகவே ஒரு ரயில் புறப்பட்டுச் சென்றதற்காக அந்த ரயில்வே நிர்வாகம் மன்னிப்பு கோரியிருப்பது பரவலாக பேசப்பட்டுவருகிறது. இது பல்வேறு ஊடகங்களிலும் செய்தியாகியுள்ளது.

நடந்தது என்ன?

சுகுபா எக்ஸ்பிரஸ் ரயில். இது அன்றாடம் தலைநகர் டோக்கியோ - மினாமி நகரேயமா நிலையங்களுக்கு இடையே பயணிக்கிறது. வழக்கமாக காலை 9.44 மணி 40 வினாடிகளுக்குப் புறப்பட வேண்டிய இந்த ரயில் அன்றைய தினம் 9.44 மணி 20 வினாடிகளுக்கே புறப்பட்டுச் சென்றது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட சுகுபா எக்ஸ்பிரஸ் ரயில் நிறுவனம், இதற்காக வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

"எங்களது வாடிக்கையாளர்களுக்கு இடையூறை ஏற்படுத்திய அந்த சம்பவத்துக்காக நாங்கள் வருந்துகிறோம். இதுதொடர்பாக எந்த ஒரு வாடிக்கையாளரும் புகார் அளிக்கவில்லை. வெறும் 20 விநாடிகள் வித்தியாசம் என்பதால் எந்த ஒரு பயணியும் ரயிலை தவறவிடவில்லை. இருப்பினும் நாங்கள் எங்கள் மன்னிப்பை பதிவு செய்கிறோம்" எனத் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் புல்லட் ரயில்கள் வேகத்துக்கு மட்டுமல்ல நேரம் தவறாமைக்கும் பெயர் பெற்றவை. அதன் காரணமாகவே 20 வினாடி முன்னதாக ரயில் புறப்பட்டதற்குக்கூட சம்பந்தப்பட்ட ரயில் நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.

இந்த செய்தி பலதளங்களிலும் வெளியாக, இது குறித்து அந்த ரயில்வே நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, "நாங்கள் வெளியிட்ட மன்னிப்பு அறிக்கை இவ்வளவு பேரது கவனத்தை ஈர்த்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு முன்னதாகவும்கூட இதுமாதிரியான மன்னிப்பு அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறோம்.

இந்த சம்பவத்தைப் பொருத்தவரை, 20 விநாடிகள் முன்னதாகவே புறப்பட்டது என்பது பிரச்சினையல்ல. பாதுகாப்பு அம்சங்கள் சரியாக பின்பற்றப்படவில்லை என்பதே எங்களின் வருத்தத்துக்கு காரணம்.

அதாவது ஒரு ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக மணி ஓசை எழுப்பப்படும். அதன்பின்னர் அறிவிப்பு வெளியாகும். இது ரயிலில் ஏறும்போதும் இறங்கும்போதும் பயணிகள் கதவுகள் திறப்பது மூடுவது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் அறிவிப்பு.

மெத்தனமான நிர்வாகம் ரயில் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதாலேயே அந்த மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டோம்" எனக் கூறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் சலசலப்பு:

இதற்கிடையில், ஜப்பானில் சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் சிலர் இந்த மன்னிப்புக்கு ஆதரவாகவும் சிலர் எதிராகவும் கருத்துகளை பதிவிட்டுவருகின்றனர்.

ஜப்பானில்கூட இப்படி நடக்கிறதா என ஒரு பதிவர் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மற்றொரு நபர், "விந்தையான நாடு. 20 விநாடி வித்தியாசத்துக்கு மன்னிப்பு கோரப்படுகிறது. ஆனால், பெரும் ஊழல்கள் சர்வசாதாரணமாக நிகழ்ந்துவிடுகின்றன" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஜப்பான் இன்க் நிறுவனத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட ஊழலை சுட்டிக்காட்டியே அந்த நபர் இந்தப் பதிவை வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT