உலகம்

உலக மசாலா: கண்களை மூடி வண்ணம்

செய்திப்பிரிவு

நேபாளத்தைச் சேர்ந்த 11 வயது தீப்தி ரெக்மியால் கண்ணை மூடிக்கொண்டே ஒரு பொருளின் நிறத்தைக் கண்டுபிடிக்க முடிகிறது! கண்களைக் கட்டிவிட்டு, இவரிடம் ஒரு பொருளைக் கொடுத்தால் சில நொடிகள் தடவிப் பார்க்கிறார், சில நொடிகள் முகர்ந்து பார்க்கிறார். பிறகு சரியாக நிறத்தைச் சொல்லிவிடுகிறார். அதேபோல் செய்தித்தாளில் உள்ள எழுத்துகளின் வண்ணத்தையும் கையால் தடவி, முகர்ந்து பார்த்துச் சொல்லிவிடுகிறார். தீப்தியின் பெற்றோர் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். தங்கள் மகளின் திறமையைக் கண்டு பெருமை கொள்கிறார்கள். “யாராலும் செய்ய முடியாததை என் மகள் செய்கிறாள்! அவளின் பெற்றோராக இருப்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. சிலர் இது ஏதோ சினஸ்தீசியா குறைபாடு என்று சொல்கிறார்கள். இதுவரை நாங்கள் மருத்துவரிடம் செல்லவில்லை. அவள் மிக நன்றாகப் படிக்கிறாள். புத்திசாலியாகவும் இருக்கிறாள். இத்துடன் வண்ணம் அறியும் திறனையும் பெற்றிருக்கிறாள்” என்கிறார் தீப்தியின் அம்மா. சினஸ்தீசியா மரபணுக் குறைபாட்டால் ஏற்படுகிறது. இதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆண்களைவிடப் பெண்களை அதிகம் பாதிக்கிறது. இந்தக் குறைபாடுடையவர்கள் படைப்புத்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கண்களை மூடி வண்ணம் அறியும் சிறுமிக்கு வாழ்த்துகள்!

தாய்லாந்தைச் சேர்ந்த 65 வயது சோம்போங் சோம்புபிரபெட் என்ற பெண்மணி, தனக்கு ஓர் இணை வேண்டும் என்று வீட்டு வாசலில் விளம்பரம் வைத்திருக்கிறார். இவருக்கு ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் நடந்தும் நிம்மதியான வாழ்க்கை அமையவில்லை. முதல் கணவர் குடிகாரர். ஒருகட்டத்தில் அவரை விட்டுவிட்டு, வேலை தேடி ஜெர்மனிக்குச் சென்றுவிட்டார் சோம்போங். அங்கே இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். 13 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, அந்தத் திருமணமும் முடிவுக்கு வந்தது. தாய்லாந்து திரும்பியவருக்குத் தனிமை மிகவும் கொடுமையாக இருந்தது. இரண்டு திருமணங்களால் கிடைக்காத அன்பும் அரவணைப்பும் மூன்றாவது திருமணத்திலாவது கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார். “70 வயதுக்குள் இருக்கும் ஒருவரை என் துணையாக எதிர்பார்க்கிறேன். அவர் நிச்சயம் ஓய்வூதியம் பெறுபவராக இருக்க வேண்டும். ஏனென்றால் நான் திருமணம் செய்துகொண்டால், என் பிள்ளைகள் பணம் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள். என்னுடைய ஓய்வூதியம் 15 ஆயிரம் ரூபாய். தாய்லாந்தில் இதை வைத்துக்கொண்டு ஒருவர்தான் வாழமுடியும். அதனால் ஓய்வூதியக்காரரை எதிர்பார்க்கிறேன். நான் விளம்பரம் வைத்து ஒரு வாரத்தில் இரண்டு விண்ணப்பங்கள் வந்தன. ஓய்வூதியம் இல்லாததால் இரண்டையும் நிராகரித்துவிட்டேன். விளம்பரத்தைப் பார்த்து ஒருவர் என்னிடம் வந்து பேசினார். அதைப் படம் எடுத்து, எனக்கு இணை கிடைத்துவிட்டதாக தகவல் பரப்பிவிட்டனர். இன்னும் நான் தனியாகத்தான் இருக்கிறேன். விரைவில் இணை கிடைப்பார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” என்கிறார் சோம்போங்.

உங்களுக்கு அன்பான இணை விரைவில் கிடைக்கட்டும்!

SCROLL FOR NEXT